தமிழக மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்று வந்த பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி கள் வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ளன. தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியாக உள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது..
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்தேர்வை 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினர். தமிழ் உள்ளிட்ட மொழித்தாள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விருப்ப பாடம் என ஒவ்வொரு பாடத்துக்கான தேர்வும் குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை விடப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்ற வந்தது.

இந்நிலையில், கடைசி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிந்த நிலையில் மாணவ, மாணவிகள் மிகவும் உற்சாகமடைந்தனர்.
தேர்வுகள் முடிந்ததைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
மாநிலம் முழுவதும் 88 விடைத்திருத்தும் மையங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. இப்பணியில் சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். அரசு தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்தபடி, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: பொதுத்தேர்வு முடிந்துவிட்டது. இதையடுத்து மாணவர்களின் விடைத் தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட உள்ள. அங்கிருந்து விடைத்தாள் திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்கள் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி சிறப்பான முறையில் நடைபெறும்.
இதற்காக தமிழகம் முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். தொடர்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 10-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். மேலும், தமிழ் வழிமற்றும் ஆங்கில வழி விடைத்தாள்களை அதற்குரிய ஆசிரியர்கள் மட்டுமே திருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












