ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வும்; முதன்மைத் தேர்வும் – சில முக்கிய குறிப்புகள்

Posted By:

சென்னை: குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்கின்ற பதவிகளைப் பற்றி கேட்டாலே அந்தப் பதவி வகிப்பவர்களை வியந்து நோக்கி வருகிற இளைஞர்கள்தான் அதிகம்.

அந்தப் படிப்பை படித்துத் தேறி "அது போன்ற பதவிகளை நாமும் அடைய முடியுமா" என சந்தேகமே வேண்டாம்.

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வும்; முதன்மைத் தேர்வும் – சில முக்கிய குறிப்புகள்

அது நிச்சயம் உங்களால் முடியும். இதோ சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதன்மை மற்றும் முதல்நிலை தேர்வுகளை சுலபமாகக் கையாளும் வழிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

நேர்மையின் மறுபிறப்புகள்:

தங்களுக்குள்ள வானளாவிய அதிகாரத்தின் மூலம் நேர்மையாகவும், பொதுமக்களுக்கு சேவை புரிவதையே கடமையாகவும் கொண்டு செயல்பட்டு, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் அதிகாரிகளைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம்.

மத்திய தேர்வாணையம் தேர்வு:

இத்தகைய உயர் அதிகாரிகளை ஒவ்வொரு ஆண்டும் மத்திய தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது. இத்தேர்வைச் சந்திக்க நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் நான்கு லட்சம் மாணவர்கள் தயார் ஆகிறார்கள்.

அடிப்படைத் தகுதிகள்:

இதற்கு அடிப்படைத் தகுதிகளாக இரண்டு தகுதிகளைக் கூறலாம். முதலாவதாக கல்வியறிவுத் தகுதி. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பட்டப்படிப்பு வேண்டும்:

பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களும் தகுதியானவர்கள்தான். இத்தேர்வை எழுத விரும்புவோர் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தால் போதும். மதிப்பெண்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டப்படிப்பும் தகுதியானதுதான்.

வயது வரம்பு தகுதி விவரம்:

அடுத்ததாக வயது வரம்புத் தகுதி. இதில் தேர்வு எழுதும் ஆண்டில் ஆகஸ்ட் முதல் தேதி அன்று 21 வயது பூர்த்தி ஆனவராக இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால் 30 வயதும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால் 33 வயது வரையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால் 35 வயது வரையிலும் எழுதலாம்.

எழுதுவதற்கான கட்டுப்பாடுகள்:

மேலும் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகபட்சம் எத்தனை முறை எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. பொதுப்பிரிவினருக்கு 4 முறையும், பிற்படுத்தப்பட்டோருக்கு 7 முறையும் அவகாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எந்த ஒரு வரைமுறையும் இல்லை. தற்போது எழுதும் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு காலகட்டம்:

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தேர்வுக்கான விளம்பரம் மத்தியத் தேர்வாணையத்தால் வெளியிடப்படும்.

முதல்நிலைத் தேர்வு:

விளம்பரம் வெளியான தேதியில் இருந்து விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்படும். விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தலைமைத் தபால் நிலையத்தில் முப்பது ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக முதல் நிலைத்தேர்வு மே அல்லது ஜூன் மாதம் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும்.

தேர்வின் நிலைகள்:

சிவில் சர்வீசஸ் தேர்வு முதல்நிலைத் தேர்வு (பிரிலிம்ஸ்), முதன்மைத் தேர்வு (மெயின்), ஆளுமைத் திறன் எனும் நேர்முகத் தேர்வு (இன்டர்வியூ) என்று மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றது.

முதல் நிலைத்தேர்வு:

2010 வரை முதல்நிலைத் தேர்வில் பொது அறிவுப்பாடம், விருப்பப்பாடம் என இரு தாள்கள் இருந்தன. ஆனால் 2011 ல் இருந்து மத்தியத் தேர்வாணையம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அப்ஜெக்டிவ் முறை கேள்விகள்:

இதில் விருப்பப்பாடத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக திறனறித் தாளை சேர்த்துள்ளது. இரு தாள்களுமே கொள்குறி (அப்ஜெக்டிவ்) வினாக்களை உள்ளடக்கியுள்ளன. பொது அறிவுத்தாளுக்கு 200 மதிப்பெண்களும் திறனறி தேர்வுக்கு 200 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

எப்பகுதிகளில் இருந்து கேள்விகள் வரும்?:

பொது அறிவுத்தாள் கேள்விகள் பெரும்பாலும் இளங்கலைப் பட்டப்படிப்புக்கு சமமானதாகவே இருக்கும். இந்தத் தாள் ஏழு பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், சுற்றுப்புறவியல், நடப்பு நிகழ்வுகள் என ஏழு பகுதிகளைக் கொண்டது.

நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம்:

ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வெவ்வேறு விகிதங்களில் கேள்விகள் கேட்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக முதல்நிலைத் தேர்வில் நடப்பு நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. உயிரியல், பொருளாதாரம், புவியியல், அரசியல் அமைப்புச் சட்டம், சுற்றுப்புறச்சூழல் ஆகிய பகுதிகளில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் கூடப் பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகளை ஒட்டியே அமைகின்றன.

பொது அறிவுத்தாளை எப்படி அணுகுவது?:

முதலில் எந்த ஒரு போட்டித் தேர்வுக்குத் தயார் செய்தாலும் அந்தத் தேர்வின் முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வின் கேள்வித்தாளைப் பெற வேண்டும்.

சிறந்த வழிகாட்டி அதுதான்:

அதுதான் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வின் முந்தைய ஆண்டுகளின் கேள்விகள் புத்தக வடிவிலேயே கிடைக்கின்றன. இந்தக் கேள்வி வங்கிகளை முதலில் வாங்கி இரண்டு அல்லது மூன்று முறை நிதானமாகப் பார்க்க வேண்டும்.

மாத இதழ்கள் அவசியம்:

அப்போதுதான் கேள்விகள் ஒவ்வொரு பகுதியில் இருந்து எவ்வாறு கேட்கப்படுகின்றன என்பதைத்தெளிவாக உணர முடியும். இது தவிர, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு என்று பிரத்யேகமாக வெளிவரும் மாத இதழ்களில் ஏதேனும் ஒன்றை முழுமையாகப் படித்தல் அவசியம்.

ஆங்கில நாளிதழ் தினமும் படியுங்கள்:

ஏதேனும் ஒரு ஆங்கில நாளிதழை தினந்தோறும் தவறாமல் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

முதன்மைத் தேர்வு (மெயின்):

மெயின்ஸ் என அறியப்படும் முதன்மைத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதியில் வரும். முதன்மைத் தேர்வில் மூன்று பாடங்கள் உள்ளன. பொது அறிவு ஒரு பாடமாகவும், இரண்டு வெவ்வேறு விருப்பப்பாடங்கள் மற்ற இரண்டு பாடமாகவும் உள்ளன.

மொத்தம் இரண்டு தாள்கள்:

ஒவ்வொரு பாடமும் இரண்டு தாள்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது தாள்களாகவும், இரு விருப்பப் பாடங்கள் இரண்டு தாள்கள் வீதம், என ஆக மொத்தம் ஆறு தாள்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

2000 மதிப்பெண்களுக்கு தேர்வு:

ஒவ்வொரு தாளுக்கும் தலா 300 மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறாக ஆறு தாள்களுக்குத் தலா 300 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1800 மதிப்பெண்கள். அதோடு ஒரு கட்டுரைத் தாளும் இடம்பெறுகிறது. அதற்கு 200 மதிப்பெண்கள். ஆக மொத்தம் முதன்மைத் தேர்வில் 2000 மதிப்பெண்கள் கொண்ட வினாவுக்கு விடையளிக்க வேண்டும்.

English summary
IAS civil service examination tips about preliminary examination and main examination in the present year students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia