கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாகக் கடந்த கல்வி ஆண்டில் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
திறக்கப்படாத பள்ளிகள்
கொரோனா நோய் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்று வரையில் திறக்கப்படாமலேயே உள்ளது. ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டில், பள்ளிகளுக்கு பூஜ்யம் கல்வி ஆண்டு என்ற அறிவிப்பை வெளியிட்டு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
தேர்வுகள் ரத்து
முன்னதாக, கடந்த கல்வியாண்டில் 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
2021 கல்வி ஆண்டு
கடந்த கல்வி ஆண்டைப் போலவே வரும் 2021ம் ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் மத்தியில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கண்டிப்பாக தேர்வு நடைபெறும்
அந்த பேட்டியில், நடப்பு கல்வி ஆண்டில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும். முதலமைச்சருடன் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை விரைவில் வெளியிடுவோம். பூஜ்யம் கல்வி ஆண்டாக இந்த கல்வி ஆண்டை அறிவிப்பதற்கான வாய்ப்பு குறைவு என அவர் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படுமா?
மேலும், அமைச்சர் கூறுகையில், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பள்ளிகளைத் திறந்து விட்டு பிறகு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக மீண்டும் பள்ளிகளை மூடியுள்ளனர். இதன் காரணமாகத் தான் தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் நாங்கள் அவசரப்படவில்லை என அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












