தமிழ்நாடு முழுவதும் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று(மே.8) வெளியானது. தமிழ் பாடத்தில், மாணவிகள் லக்ஷயா ஸ்ரீ, நந்தினி ஆகிய இரண்டு பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்கள் யார் என்பதை கீழே உள்ள கட்டுரை வாயிலாக அறிந்து கொள்வோம்?
பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் தமிழ் பாடத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

நந்தினி
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த, திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களில், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார். இதன் வாயிலாக, மாவட்டத்தில் முதலிடம் பெற்றதோடு, மாநிலத்திலும் முதலிடம் பெற்றுள்ளார். அனைத்து பாடங்களிலும் நுாற்றுக்கு நுாறு பெற்ற இந்த மாணவியின் தந்தை, ஓர் தச்சு தொழிலாளி ஆவார். வெற்றிக்கு வறுமை தடையில்லை என்பதை, மாணவி நந்தினி நிரூபித்துள்ளார்.
லக்ஷயா ஸ்ரீ
அதேபோல, அரக்கோணம் தனம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவி லக்ஷயா ஸ்ரீ, தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவர், தமிழ் தவிர்த்து பொருளியல், கணக்குப் பதிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆங்கிலப் பாடத்தில் 100-க்கு 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அதேபோல வணிகவியல் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 596 மதிப்பெண் வாங்கியுள்ளார்.
47,934 பேர் தோல்வி
நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதினர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்வு முடிவுகளில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் 47,934 பேர் தோல்வியை சந்தித்துள்ளனர்.
அவர்களுக்கு, ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வுகள் துவங்கும் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications












