நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு 2019-ஆம் ஆண்டு மே 5ம் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு நவம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, குறைந்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், பல மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கப்பட முடியாத நிலையும் ஏற்பட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் அவகாசம் வழங்கக் கோரியும், நீட் தேர்விற்கான வயது வரம்பை அதிகரிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் டிசம்பர் 7ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மேலும் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையிலும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி இடஒதுக்கீடு இல்லாதவர்களும் 30 வயது வரை நீட் தேர்வு எழுதலாம்.
முன்பு இடஒதுக்கீடு உள்ளவர்கள் மட்டுமே 30 வயது வரை நீட் எழுத முடியும். இடஒதுக்கீடு இல்லாதவர்கள் 25 வயது வரை நீட் எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக மாணவர்களின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது இந்த புதிய வயது வரம்பை அளித்துள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications












