ICAR என்னும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலில் (ஐ.சி.ஏ.ஆர்.) இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது.

ஐஐடி, என்.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில ஜே.இ.இ. ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு, மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான நெட் தேர்வு உள்ளிட்ட மத்திய நுழைவுத் தேர்வுகளை என்.டி.ஏ. நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் உள்ள 101 ஐ.சி.ஏ.ஆர். உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 71 மாநில பல்கலைக் கழகங்களில் 15 சதவிகித மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் இந்த ஐ.சி.ஏ.ஆர். நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
என்டிஏ சார்பில் நடத்தப்படும் ஐசிஏஆர் சேர்க்கைக்கு இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கென தனித் தனி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும். 2020-ஆம் ஆண்டுக்கான இந்த கணினி அடிப்படையிலான தேர்வு வரும் ஜூன் 1-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இத்தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாளாகும். ICAR தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.nta.ac.in, www.icar.nta.nic.in ஆகிய இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












