சென்னைப் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் கடந்த 1980 முதல் படித்து அரியர் வைத்திருப்பவரா நீங்கள்? தற்போது அந்தத் தாள்களை எழுதி பட்டம் பெற இரண்டு வாய்ப்புகளை வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த சிறப்பு அனுமதியின் மூலம் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளில் 1980-ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் 5.5 லட்சம் பேர் பயன்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
துணைவேந்தர்
இச்சிறப்பு அனுமதி திட்டத்திற்கு சென்னைப் பல்கலைக் கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.
5.5 லட்சம் பேர் அரியர்
சென்னைப் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 1980-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளை மேற்கொண்ட மாணவர்களில் சுமார் 5.5 லட்சம் பேர் அரியர் வைத்துள்ளனர். இதில் எம்.பி.ஏ. படிப்பில் மட்டுமே 55 ஆயிரம் மாணவர்கள் அரியர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அரியர் தேர்வெழுத மீண்டும் வாய்ப்பு
இவ்வாறு அரியர் வைத்துள்ள மாணவர்களின் நலன் கருதி, இவர்கள் அனைவரும் அரியர் தாள்களை மீண்டும் எழுதி பட்டம் பெற இரண்டு வாய்ப்புகளை வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் தற்போது முடிவு செய்துள்ளது. இந்த இரண்டு வாய்ப்புகளில் அனைத்துத் தாள்களிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பட்டம் வழங்கப்படும்.
தேர்ச்சி பெற்றால் டிகிரி
இத்தேர்வில் அனைத்து தாள்களிலும் தேர்ச்சி பெறாமல் 50 சதவிகித தாள்களில் மட்டும் தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இளநிலை பட்டப் படிப்பு என்றால் சான்றிதழ் படிப்புக்கான அங்கீகாரமும், முதுநிலை பட்டப் படிப்பு என்றால் டிப்ளமோ அங்கீகாரமும் வழங்கப்படும்.
நேரடியாக இரண்டாம் ஆண்டு
அவ்வாறு சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ அங்கீகாரம் பெறும் மாணவர்கள் மீண்டும் அவர்களின் இளநிலை பட்டப் படிப்பையோ அல்லது முதுநிலை பட்டப் படிப்பையோ தொடர விரும்பினால், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை அடிப்படையில் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
இந்தியாவிலேயே முதல் முறை
இத்திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாகச் சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்துக்கு ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












