மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் சேர உதவும் நீட் நுழைவுத் தேர்வுக்காக உருவாகியிருக்கும் தனியார் பயிற்சி மையங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து புதிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது .
பல் மருத்துவம், மருத்துவப் படிப்புகளுக்கு (பிடிஎஸ், எம்பிபிஎஸ்) நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது, இதையடுத்து ஏராளமான தனியார் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் புற்றீசல் போல உருவாயின.
ஆனால் நீட் தனியார் பயிற்சி மையங்களில் அதிக அளவு கட்டணத்தைச் செலுத்தி படிக்க முடியாத நிலையில் கிராமப்புற ஏழை மாணவர்கள் உள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்த போதிலும், இதையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து, நீட் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வி, எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

தனியார் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதிகப்படியான பளுவால் ஏற்படும் மனஉளைச்சல் காரணமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் நீட் நுழைவுத் தேர்வால் உயிரிழக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தங்களது பயிற்சி மையத்தின் விளம்பரங்களில் தவறான விவரங்களை குறிப்பிடுவதை தடுக்கும் நடவடிக்கையாக, "செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை" என்ற புதிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
புதிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளின் படி, பொய்யான, தவறான, மோசடியான விளம்பரங்களை நீட் தேர்வு பயிற்சி மையங்கள் வெளியிட தடை விதிக்கப்படுகிறது. பயிற்சி நிறுவனங்கள் விளம்பரங்களில் '100 சதவிகிதம் தேர்ச்சி' அல்லது '100 சதவீத வேலை உத்தரவாதம்' என்கிற உத்தரவாதத்தை வழங்க வும் தடை விதிக்கப்படுகிறது,
ஒரு தனியார் நீட் தேர்வு நிறுவனத்தில் சேர்ந்து படித்தால் 100 சதவீதம் வெற்றி, தேர்வுகளின் முன்னிலை விவரம், மதிப்பெண் போன்ற எந்த உத்தரவாதத்தையும் வழங்க கூடாது, அப்படி உரிமை கோரி விளம்பரங்கள் வெளியிடுவது குற்றமாகும் மற்றும் தேர்வை சீர்குலைக்கும் பிற நடைமுறைகள் குறித்து தவறான விவரங்களை வெளியிடக்கூடாது என்றும் நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், பொய்யான விளம்பரங்கள் வெளியிட்டால் அபராதம் விதிப்படுவதுடன், பயிற்சி நிறுவனங்களுக்கான அனுமதி ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதோடு மட்டுமின்றி, அதுபோன்று பொய்யான விளம்பரங்களை வெளியிட்ட 31 பயிற்சி நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதுடன், அவர்களில் 9 பேருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பயிற்சி நிறுவனம் வெற்றி பெற்ற மாணவரின் புகைப்படத்துடன் தேவையான தகவலைக் குறிப்பிட வேண்டும்.
ரேங்க், வகை மற்றும் பயிற்சி காலம் மற்றும் இலவசமா அல்லது கட்டணப் பயிற்சியா என்பது போன்ற விவரங்கள் விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போலவே மாணவரின் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அந்த அறவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர உள்ளதாகவும், நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












