5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்வெழுதும் மாணவர்கள் அச்சமடையத் தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் அவரவர் பள்ளியிலேயே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், தோ்வுப்பணியில் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை ஈடுபடுத்தப்படுவர்.
இந்த பொதுத்தேர்வானது மாணவர்களின் கல்வித் திறனை மதிப்பிடவும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் கற்பிக்கும் திறனை மதிப்பிடவும் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும் வகையில் இந்தத் தேர்வு அமையும். நிகழ் கல்வியாண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்பதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வீண் அச்சம் அடையத் தேவையில்லை என அமைச்சர் கூறினார்.