அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளின் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கடந்த மாதம் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனிடையே, பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள் குறித்து முழுமையான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தின் பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக பருவத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், முந்தைய பரவத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து இதர மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் தற்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இதில் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பதிவு எண்ணை உள்ளீடு செய்தால் தேர்வு கட்டணம் கட்டாததற்கான குறியீடே பதிலாக வருவதால் மாணவர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.