அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் பொறியியல் படிப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் பைத்தான் எனும் ஒரேபாடத்தில் 52 சதவிகிதம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வு முடிவுகள் கடந்த வியாழனன்று வெளியிடப்பட்டது. அதில், முதல் பருவத்தேர்வில் பைத்தான் 'Python' என்னும் கணினி பாடத்தேர்வில் சுமார் 64 ஆயிரத்து 810 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், வெறும் 31 ஆயிரத்து 44 மாணவர்கள் மட்டுமே பைத்தான் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதாவது, தமிழகம் முழுவதும் சுமார் 52 சதவிகித மாணவர்கள் மட்டும் ஒரே பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா கூறுகையில், சாப்ட்வேர் வல்லுநர்கள் மூலம் முதலில் ஆசிரியர்களுக்கு பைத்தான், கோடிங் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களும் புதிய பாடத்திட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்களைத் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.