அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் இம்மாதம் இறுதிக்குள் இறுதிப்பருவத் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. இதனிடையே, கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டிற்கான பருவத் தேர்வுகளை ரத்து செய்து கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகள் குறித்த எவ்வித அறிவிப்பும் வெளிவராத நிலையில், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை இந்த மாதம் இறுதிக்குள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள் வேலைக்கு தேர்வாகியும் தேர்வு எழுத முடியாத காரணத்தால் பணியில் சேர முடியாத சூழல் நீடித்து வருகிறது. இதனால் 5 அலகுகளுக்குப் பதில், 4 அலகுகளுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, 30 சதவிகித மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு நிலைமை சீரான பிறகு எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












