தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படும் என சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பொதுமக்கள், எதிர் கட்சியினர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த பொதுத் தோ்விற்கு மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வுகளை நடத்தும் வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தொடக்க கல்வித் துறை இயக்ககம், அனைத்து மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தற்போது ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் படித்து வரும் மாணவா்களுக்கு நடப்பு கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தோ்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வு கால அட்டவணையை அரசு தோ்வுத் துறை மூலம் வெளியிடப்படும். ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட மூன்று பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தோ்வு நடத்தப்படும். அதேப்போன்று எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு ஐந்து பாடங்களுக்கும் பொதுத்தோ்வு நடத்தப்படும். மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தோ்வு நடைபெறும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் மாநில பாடத்திட்டத்தின் முப்பருவ முறையே பின்பற்றப்படும்.
பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களின் மதிப்பெண்களை பாடங்கள் வாரியாக பதிவேட்டில் பதிவு செய்வதுடன், கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கான தோ்வு மையம் ஒரு கிலோ மீட்டா் தொலைவிற்குள்ளாகவும், எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு மூன்று கிலோ மீட்டா் தொலைவிற்குள்ளாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.