தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை அந்தந்த பள்ளிகளிலேயே எழுதலாம் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
12ம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வு எழுதியதும் பட்டய கணக்காளா் பயிற்சி அளிப்பதற்கு முதலமைச்சரின் ஒப்புதலோடு கடந்த ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மாணவர்களுக்கு இலவசமாக இந்தப் பயிற்சியை அளிப்பதற்கு பட்டய கணக்காளர்களாக இருப்பவர்கள் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது அதற்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக அளிக்கப்பட உள்ள இந்தப் பயிற்சி, பள்ளிகளில் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
5, 8 பொதுத் தேர்வு
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தோ்வை எழுதலாம் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு பள்ளி மாணவரை தோ்வுக்காக அருகில் இருக்கும் மற்றொரு பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாடு எப்படி உள்ளது என ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற பொதுத்தேர்வு முதலமைச்சரின் ஒப்புதலோடு நடத்தப்படுகிறது. இதில், நூற்றுக்கு நூறு சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள்.
இதுபோன்ற பொதுத் தேர்வு பல மாநிலங்களில் நடத்தப்படுகிறது. மாணவர்கள் எளிதாகப் புரிந்து தோ்வு எழுதக்கூடிய வகையில் வினாத்தாள்கள் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












