நாளை முதல் பிளஸ் டூ தேர்வுகள்.. கடைசி நேர தீவிர 'ரிவிஷனில்' எட்டரை லட்சம் மாணவ, மாணவியர்!

Posted By:

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ்டூ தேர்வுகள் தொடங்குகின்றன. இந்தத் தேர்வை எட்டரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

நாளை தொடங்கும் பிளஸ்டூ தேர்வுகள் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகின்றன. இந்தத் தேர்வு மொத்தம் 6256 பள்ளிகளில் நடைபெறவுள்ளது.

நாளை முதல் பிளஸ் டூ தேர்வுகள்.. கடைசி நேர தீவிர 'ரிவிஷனில்' எட்டரை லட்சம் மாணவ, மாணவியர்!

தேர்வை மொத்தம் 3,90,753 மாணவர்கள், 4,52,311 மாணவிகள் உள்பட 8,43,064 பேர் எழுதவுள்ளனர். இதில் 42 ஆயிரத்து 963 பேர் தனித்தேர்வர்கள் ஆவர்.

புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வுகளை 128 பள்ளிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 575 மாணவர்களும், 7 ஆயிரத்து 731 மாணவிகளும் 33 மையங்களில் எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சேர்த்து மொத்தமாக தமிழ் வழியில் பிளஸ்-2 தேர்வை 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர்கள் பங்கேற்கிறார்கள்.

பிளஸ்-2 பொதுத் தேர்வினைப் பொறுத்தவரை பள்ளி மாணவ, மாணவிகளில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதலாக 16,947 மாணவ, மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

சிறைவாசிகளும் தேர்வு எழுத சிறையிலேயே கடந்த சில வருடங்களாக தேர்வு மையம் அமைக்கப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பிளஸ்-2 தேர்வினை 77 சிறைவாசிகள் புழல் மத்தியச் சிறையில் எழுத இருக்கிறார்கள்.

டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்கான சொல்வதை எழுதுபவர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு மற்றும் கூடுதல் ஒரு மணிநேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேர்வு மையங்களின் தரைத்தளத்தில் எழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே, நான்கு சக்கர வாகனங்களில் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு வழித்தட அலுவலர்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் அதே வாகனங்களில், விடைத்தாள் கட்டுகளை, மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடைத்தாள் கட்டுகள் சேகரிக்கும் மையங்களுக்குக் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வினாத்தாள் கட்டுக் காப்பீட்டு மையங்களில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரால் குழு ஏற்படுத்தப்பட்டு கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

மாணவ-மாணவிகள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கவும், கண்காணிக்கவும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேர்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இப்பணியில் ஈடுபடும் பணி மூத்த முதுகலை ஆசிரியர்கள், பள்ளிக்கூட உதவி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோர் தேர்வு மையங்களை தீவிரமாகக் கண்காணிக்க உள்ளனர். மாணவர்கள் காப்பி அடித்து, கண்காணிப்பாளரால் பிடிபட்டால் அந்த தேர்வை மட்டும் அவர்கள் எழுதமுடியாது. ஆனால் அடுத்து வருகிற தேர்வை எழுதலாம்.

English summary
+2 exams will begin tomorrow in Tamil Nadu and Puducherry.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia