தமிழகத்தில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான துணைத் தேர்வுகளுக்குத் தனித்தேர்வர்கள் வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள 11 மற்றும் 12ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வர்களுக்குக் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மார்ச் 2019 மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், அந்தத் தேர்வுகளில் தோல்வியடையும் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் படித்த பள்ளி, தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஜூன் மாதம் சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்புகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல்12-ஆம் தேதி வரையில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்வது குறித்தான மேலும் விபரங்களை அறிய www.dge.tn.gov.in என்னும் தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












