தமிழகத்தில் 10-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிப்ரவரி 21ம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் பத்தாம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான அட்டவணை http://www.dge.tn.gov.in/ என்னும் தேர்வுத் தறையின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
(10, 11, 12 பொதுத் தேர்வு அட்டவணையைக் காண)
10, 11, 12 வகுப்பு மாணவர்களே..! பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
இவற்றில், 10-ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,10 ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வினை பிப்ரவரி 21 முதல் 28 ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர் நடத்தி முடிக்க வேண்டும். தனித் தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 21 முதல் 28-ம் தேதிக்குள் நடத்திட வேண்டும்.
தனித்தேர்வர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச் சீட்டினை பிப்ரவரி 25 ஆம் தேதியன்று dge.tn.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தலைமை ஆசிரியர்கள் செய்முறைத் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியலை மார்ச் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.