ஆசிரியர் தேர்வு வாரியம் என்று அழைக்கப்படும் டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டியது என்ன என்பது குறித்து கல்வியாளர்கள் டிப்ஸ்களையும், வழிமுறைகளையும் தேர்வர்களுக்கு வழங்கியுள்ளனர். அது என்ன என்பது குறித்து கீழே உள்ள கட்டுரையில் காணலாம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Tamil Nadu Teachers Recruitment Board) என்பது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகள், பல்தொழிநுட்பக் கல்லூரிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் தன்னாட்சி அமைப்பாக உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்திலுள்ள ஈவிகே சம்பத் மாளிகையின் மூன்று மற்றும் நான்காவது தளத்தில் இந்நிறுவனம் அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தைக் களைவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் இத்தேர்வாணையம் 17 ஆகத்து 1987 இல் அமைக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் ஆசிரியர்களை சரியான நேரத்தில் பணியமர்த்துதல் ஆகும்.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, 1987 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது. வாரியம் இப்போது ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர் ஆகிய மூன்று துறைகளுக்குப் பணியமர்த்தும் பொறுப்பைக் கொண்டுள்ளது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் சட்டப் படிப்பு. ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான நோடல் ஏஜென்சியாகவும் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு வகை பதவிகளுக்கான ஆட்சேர்ப்புகளுக்கும் இந்த வாரியம் பணியாற்றி வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்திடம் பின்வரும் வகைப் பணிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.

பள்ளிக் கல்வி: இடைநிலை வகுப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள்,
ஓவிய ஆசிரியர்கள், ,பி.டி. உதவியாளர்கள், தையல் ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள். முதுகலை உதவியாளர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், தரம் - I
கணினி பயிற்றுனர்கள், தரம் - I, தொகுதி கல்வி அலுவலர்கள், ,வேளாண் பயிற்றுனர்கள், SCERT - விரிவுரையாளர்கள், SCERT - மூத்த விரிவுரையாளர்கள்
SCERT - இளநிலை விரிவுரையாளர்கள், உயர் கல்வி அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள், சட்ட ஆய்வுகள் இயக்குநரகம்-அரசு சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் ஆகியோரையும் தேர்வு வாரியம் நியமிக்கிறது.
தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இதனால் அந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பும் வேலையில் ஆசிரியர்கள் மும்முரமாக உள்ளனர்.
தமிழ்நாடு அரசு தொடக்க கல்வித்துறையில் 2023-24ம் ஆண்டில் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1768 இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். பிப்ரவரி 14ம் தேதி(இன்று) முதல் மார்ச் 15-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூன் 23ம் தேதி நடைபெறவுள்ளது. பின்னடைவு இடங்கள் தமிழ் 19, சிறுபான்மை மொழி 20 இடங்கள் உள்ளன. இவை தவிர புதிய இடங்களாக தமிழ் 1388, தெலுங்கு 75, உருது 35, கன்னடம் 2 என மொத்தம் 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன.
காலி இடங்கள் என்ன:
மேலும் பள்ளிகளில் காலி இடங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன என்ற விவரமும் தற்போது தெரியவந்துள்ளது.
கள்ளர் நலப் பள்ளிகளில் 18, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 139, மலைவாழ் நல பள்ளிகளில் 22, மாற்றுத்திறன் கொண்டோர் நலப் பள்ளிகளில் 29 இடங்களும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 20, சிறுபான்மை மொழி உருது 1 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்த போட்டித்தேர்வு தொடர்பான முழு விவரங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் காண முடியும்.
தேர்வுக்கான மதிப்பெண்கள்:
போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு தற்போது பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படும்.
தேர்வில் 150 கேள்விகள் இடம்பெறும். மதிப்பெண்கள் 150 வழங்கப்படும். இந்த தேர்வில் பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் (40 சதவீதம்), பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினர் குறைந்தபட்சமாக 45 (30 சதவீதம்) மதிப்பெண்ணும் பெற வேண்டும்.
வெளிப்படைத்தன்மை
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது தவறான தகவல்களை தேர்வு எழுதும் நபர்கள் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுப் பொறுப்பு
போட்டித் தேர்வுக்கான விண்ணப்பித்தில் அளிக்கப்படும் அனைத்து தகவல்களுக்கும் தேர்வு எழுதும் நபர்களே முழு பொறுப்பேற்க வேண்டும் என்பது முக்கியம். கணினி மையங்களில் ஏற்படும் தவறுகளுக்கும் அவர்களே பொறுப்பு ஆவார்கள். ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக படித்து பார்த்த பிறகு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது முக்கிய அம்சமாகும்.

எத்தனை மொழி:
இடைநிலை ஆசிரியர் தேர்வு: தமிழ், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் பாடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு இடங்கள் இருக்கிறது, எந்த இட ஒதுக்கீட்டின் கீழ் அவை நிரப்பப்படும் என்ற விவரங்கள் இணைய தளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தேர்வர்கள் அறிந்திருப்பது நல்லது.
தகுதிகள் விவரம்:
இடைநிலை ஆசிரியர் பணிக்கு 2024 ஜூலை மாதம் 53 வயது நிரம்பியவர்கள் பொதுப் பிரிவின் கீழும், இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் உள்ளவர்கள் 58 வயது வரை உள்ளவர்களாகவும் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள். மேலும், தமிழ்மொழியில் அனைவரும் தகுதி பெற வேண்டும்.
தமிழில் தேர்ச்சி:
தமிழ்மொழி தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அவர்களின் அடுத்த தாள் திருத்தப்படும். தேர்வுக் கட்டணமாக பொது பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.300 கட்டணம் செலுத்தினாலே போதுமானது. தேர்வுக் கட்டணத்தை இணைய தளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
வெயிட்டேஜ்:
போட்டி எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண்ணுடன் ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்களும் சேர்த்து தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தொடக்க கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் நியமனங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை:
தேர்வுக்கான கேள்வித்தாளில் மொழிப்பாடத்துக்கான கேள்விகள் அந்த மொழியிலும், ஆங்கில பாடத்துக்கான கேள்விகள் ஆங்கிலத்திலும், இதர பாடங்களுக்கான கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இடம்பெறும். தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் ஏற்கனவே தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றை கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர் சான்று சரிபார்ப்பு நடத்தி தொடக்க கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் நியமனங்கள் வழங்கப்படும். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
உடனடியாக விண்ணப்பங்களை அனுப்புங்கள்: இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமனத் தேர்வுக்கான விண்ணப்பங்களை அனுப்பும் நாள் தொடங்கிவிட்டது. எனவே, இந்தத் தேர்வுக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்கள் இனியும் தாமதிக்கவ வேண்டாம். தங்களது விண்ணப்பங்களை உடனடியாக அனுப்பி அதற்கான ஒப்புகைச் சீட்டையும் பெற்று வைத்துக் கொள்ளுங்கள் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Apply Online என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் பக்கத்தில் பெயர், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட அடிப்படை தகவல்களை உள்ளிட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்த பின்னர் உங்களின் செல்போன் எண்ணுக்கு உள்நுழைவு ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு அனுப்பப்படும்.
இந்த உள்நுழைவுச் சான்றுகள் மூலம் உள்நுழைந்து, கல்வித் தகவல்கள், தேர்வு மைய விவரம் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து உங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய பின்னர், விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், எதிர்கால பயன்பாட்டிற்காக அந்த விண்ணப்பத்தை உங்கது கம்ப்யூட்டரிலோ அல்லது இ-மெயிலிலோ சேமித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
இந்த தேர்வு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய https://www.trb.tn.gov.in/admin/pdf/994791851SGT Notification - 2024.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
அறிக்கையை டவுன்லோடு செய்ய:
டிஆர்பி அறிக்கை தொடர்பான பக்கத்தை டவுன்லோடு செய்ய https://www.trb.tn.gov.in/admin/pdf/994791851SGT Notification - 2024.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications












