டோபல் தேர்வுகளில் வெற்றி பெற என்ன வழி....?

ஆங்கில திறனை மதிப்பிடுவதற்கான சர்வதேச தேர்வுகளில் டோபல் தேர்வு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த தேர்வுகளில் மாணவச் செல்வங்கள் வெற்றி பெறும்போது வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பிரபலமான பல்கலைக்கழகங்களில் இணைந்து உயர்கல்வியைப் பெற முடியும். முயற்சி செய்தால் டோபல் தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிதான ஒன்றாகும் என்று கல்வி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில சேர்க்கை பெறுவதற்கு மாணவச் செல்வங்களுக்கு உதவும் காரணிகளில் டோபல் தேர்வு மதிப்பெண்ணும் முக்கியமான ஒன்றாகும்.

TOEFL, IELTS, PTE - என்று அழைக்கப்படும் தேர்வுகள் சர்வதேச அளவில் நடத்தப்படும் ஆங்கிலத் திறன் மதிப்பீட்டுத் தேர்வுகளாக அமைந்துள்ளன. வெளிநாட்டில் படிக்க, வேலை செய்ய, குடியேற இந்த தேர்வுகள் பயன்படுகின்றன.

இந்தத் தேர்வுகளின் முக்கியத்துவம், அவசியம் குறித்து கல்வி நிபுணர்கள் கூறுவது என்ன....
பொதுவாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் உயர்கல்வி பயில இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் செல்கின்றனர். அங்கு வேலை கிடைத்து செல்வோரும், வேலை தேடிச் செல்வோரும், கார்ப்பரேட் நிறுவனங்களால் உயர்கல்விக்கும், உயர்நிலை பயிற்சி பெற அனுப்பப்படும் தொழிலாளர்களும், ஊழியர்களும் உள்ளனர். மேலும் அந்த நாடுகளில் சென்று குடியேற விரும்பும் ஏராளமான பொது மக்களும் உண்டு. இதுபோன்ற அனைவரும் அந்த நாடுகளில் உள்ள பொதுமக்களிடமும், அலுவலகங்களிலும், கல்வி நிலையங்களிலும் சரளமாகப் பேசவும், அவர்கள் பேசுவதைப் புரிந்து கொண்டு எளிதில் பதில் அளிக்கவும், பதிவு செய்யவும் தேவையான ஆங்கில மொழித் திறன் தங்களுக்கு உள்ளது என்பதை நிரூபிப்பது அவசியம்.

டோபல் தேர்வுகளில் வெற்றி பெற என்ன வழி....?

அதற்காக சர்வதேச அளவில் நடத்தப்படும் TOEFL (Test of English as a Foreign Language),
IELTS (International English Language Testing System), PTE (Pearson Test of English) போன்ற திறன் மதிப்பீட்டுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுகள் வெளிநாடு செல்லும் மாணவர்கள், நிபுணர்களுக்கு மிகவும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.

இதில், IELTS- தேர்வு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கும், வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்றத்துக்கும் ஆங்கில மொழித்திறனை அறிந்து கொள்வதற்கான தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வு Academic, General என இருவகையாக நடத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், இங்கிலாந்தில் குடியேறுவதற்கு IELTS-life Skills- என்ற தேர்வும் உள்ளது.

IELTS Academic தேர்வு பல்கலைக்கழகப் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தேர்வு முடிவுகள் "பேண்ட்' என்ற மதிப்பீட்டில் கணக்கிடப்படுகிறது. 0 முதல் 9 வரை பேண்ட் உள்ளது. பல்கலைக்கழக பட்டப் படிப்பில் சேர இந்தத் தேர்வில் குறைந்தபட்சம் 6.5 பேண்ட் எடுக்க வேண்டும். இதில், ஆங்கில மொழித்திறனை அறிவதற்கான கேட்டல், வாசித்துப் புரிந்துகொள்ளுதல், எழுதுதல் மற்றும் பேசுதல் போன்ற திறன்களை ஆய்வுசெய்து மதிப்பீடு செய்யப்படுகிறது.

IELTS General தேர்வுக்கும், Academic தேர்வுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. கேட்கும் திறன் மற்றும் பேச்சுத் திறனில் இரு தேர்வுகளும் ஒரே மாதிரியானவைதான். வாசித்துப் புரிந்துகொள்ளும் திறனில், வாசிப்புப் பத்தி (paragraph) General தேர்வில் சற்று எளிதாக அமையும். காரணம், இந்தத் தேர்வு பணியாற்ற செல்வோர், குடியேற்றம் பெற விரும்புவோருக்கு மட்டும் நடைபெறுவதாகும். அகாதெமிக் தேர்வு உயர்கல்வி பெறுவோருக்கு என்பதால் சற்று கடினமாக இருக்கும்.

IELTS தேர்வு பெரும்பாலும் ஆப்-லைன் முறையிலேயே நடைபெறும். இந்தத் தேர்வு தமிழகத்தில் மதுரை, திருச்சி, புதுச்சேரி போன்ற நகரங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறையும், கோயம்புத்தூரில் மாதம் இருமுறையும், சென்னையில் மாதம் 3 முறையும் நடைபெறுகிறது. IELTS தேர்வில் குறைந்த பேண்ட் பெற்றால் மீண்டும் தேர்வு எழுதலாம். பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பயில 6.5 பேண்ட்டும், பட்டயப்படிப்பிற்கு 6 பேண்ட்டும், சான்றிதழ் படிப்புகளுக்கு 5.5 பேண்ட்டும் குறைந்தபட்ச மதிப்பீடாகக் கருதப்படுகிறது.

டோபல் தேர்வுகளில் வெற்றி பெற என்ன வழி....?

தேர்வு மதிப்பீடு 2 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். கடைசியாக நாம் பெற்ற தேர்வு மதிப்பீடே கல்விச் சேர்க்கையின்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கவுன்சில், ஐடிபி ஆகியவை இணைந்து இந்த தேர்வுகளை நடத்துகின்றன.

PTE தேர்வு என்பது பியர்சன் அகாதெமியால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் குடியேற்றம் பெறவும் உயர்கல்விக்கான மொழித்திறன் தேர்வாகவும் கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

TOEFL தேர்வு தற்போது வட அமெரிக்காவில் ஒருசில பல்கலைக்கழகங்களில் மட்டுமே தேவையாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் 120. பல்கலைக்கழக படிப்பில் சேர குறைந்தது 80 மதிப்பெண்களை மாணவர்கள் எடுக்கவேண்டும்.

இந்த டோபல் (TOEFL) தேர்வை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் ETS என்ற நிறுவனம் நடத்துகிறது. தேர்வுகளுக்கு குறைந்தது ஒருவாரத்திற்கு முன்பு பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கட்டணம் TOEFL, IELTS, PTE ஆகியவற்றுக்கு தலா ரூ. 11,300. இந்த கட்டணங்களை பற்று அட்டை, கடன் அட்டை (டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட்) வழியாகச் செலுத்தலாம்.

சர்வதேச அளவில் 130 நாடுகளில் உள்ள 11,000 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் TOEFL மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்காக 165 நாடுகளில் 4500-க்கும் அதிகமான மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதில், TOEFL தேர்வு கல்விச் சேர்க்கைக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. ஆனால், IELTS தேர்வு பிரிட்டன் (யு.கே), கனடா நாடுகளில் குடியேற்றத்துக்கும் பயன்படுகிறது. அதேபோல, பிரிட்டனில் டோபல் நீண்ட காலத்துக்கு அங்கீகரிக்கப்படுவதில்லை. குறிப்பாக, பிரிட்டனில் 4 அடுக்கு விசாவில் கல்வி பயில டோபல் (TOEFL) மதிப்பீடு பயன்படுவதில்லை. அதே சமயத்தில் அமெரிக்காவில் இது அதிகமாகப் பயனாகிறது.
ஓரளவு நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்கள் 2 மாதப் பயிற்சியில் டோபல் தேர்வுகளுக்கு தயாராகிவிடலாம். ஆங்கிலத்தில் அடிப்படைத் திறன் தேவைப்படுவோர் மேலும் ஒரு மாதம் பயிற்சி பெற வேண்டியதிருக்கும். ஒரு பயிற்சிக்கு ரூ. 6000 வரை தேவைப்படும் என்று கருதப்படுகிறது.

எனவே, ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குச் செல்வோர், குறிப்பாக கல்வி பயிலச் செல்லும் மாணவர்கள் தாங்கள் செல்லும் நாடு, அங்கு பயில விரும்பும் பாடம் ஆகியவற்றை முடிவு செய்யும்போது அந்த நாடுகளில் எந்த வகையான ஆங்கில மொழித்திறன் தேர்ச்சி அங்கீகரிக்கப்படுகிறது என்பதை அறிந்து முன்கூட்டியே அதற்குத் தயார் செய்து கொள்வது நல்லது. குறிப்பாக, மாணவர்கள் தட்டச்சு, கணினி போன்ற பயிற்சிகளை கூடுதல் தகுதியாக கற்று வைத்திருப்பது போல, இதுபோன்ற பயிற்சிகளையும் முடித்து வைத்திருப்பது அவர்களுக்கு வருங்காலத்தில் பல பயன்களை அளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டோபல் தேர்வுகளில் வெற்றி பெற என்ன வழி....?

நிர்வகிப்பது யார்...:

கடந்த 1965-ம் ஆண்டு முதல் இந்த டோபல் (TOEFL) தேர்வானது, கல்வி தேர்வு சேவை என்ற தனியார் லாப நோக்கமற்ற அமைப்பாலும், கல்லூரி வாரியத்தலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
விடைத்தாளில் எழுதும் தேர்வாக இருந்த இது, 1998-ல் கணினி மயமாக்கப்பட்டதாகவும், 2005 -இல் இணைய மயமாக்கப்பட்டதாகவும் வடிவம் பெற்றது. ஆனால் ஈரான், ஈராக், கென்யா, மியான்மர், நார்வே, ரஷ்யா, தென்ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சில குறிப்பிட்ட நிலையங்களில் விடைத்தாள்வழி டோபல் தேர்வு குறிப்பிட்ட தேதிகளில் இன்றும் நடைபெற்று வருகிறது.

தேர்வு எழுதும் முறை:

தேர்வுக்கு முன்னதாக முதலில் இடத்தை முக்கியமாக தேர்வுசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இடத்தை வைத்து தாள்வழி தேர்வா? அல்லது இணையவழி தேர்வா? என்பதை முடிவுசெய்து கொள்ளலாம். இணையவழி தேர்வானது, படித்தல், கவனித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் போன்ற தேர்வின் அனைத்து பிரிவுகளையும் முக்கியமாக எடுத்துக்கொண்டு மதிப்பிடுகிறது. இணையவழி தேர்வானது ஒருங்கிணைந்த திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

தேர்வின் மொத்த நேரம் 4 மணி நேரமாகும். மேலும் ஒரே நாளில் எழுதப்பட வேண்டும். கணினிவழி தேர்வு எழுத நீங்கள் கணினியின் சில அம்சங்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். தேர்வு எழுதுகையில் நேரம் பார்த்தல், அடுத்தப் பக்கத்துக்கு செல்லுதல், கேட்புமுறை கேள்விகளுக்கு ஒலியை சரிசெய்தல், பத்திகளை விரிவாக படித்தல், பேசுமுறை தேர்வில் ஒலிப்பானை பயன்படுத்தல் போன்ற பல விஷயங்களுக்கு கணினி அறிவு அவசியம்.

பேச்சு தேர்வில் உங்கள் பதில்கள் ஆன்லைன் மூலமாக மதிப்பீட்டு மையத்துக்குச் சென்றுவிடும். எழுதுதல் பிரிவு இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. முதல் பிரிவில் நீங்கள் படித்த மற்றும் கேட்டவற்றுக்கு பதிலை தட்டச்சு (டைப்) செய்ய வேண்டும். இரண்டாம் பிரிவில் உங்கள் கருத்தை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். மேற்கூறிய பிரிவுகள் இரண்டு, மூன்று அல்லது மொத்தமாக நான்கு பிரிவுகளின் கேள்விகளையும் கொண்டிருக்கும்.

பின்னர் உங்கள் பதிலை வாயால் சொல்லவோ அல்லது எழுதவோ வேண்டும். இணையவழி தேர்வுக்காக பதிவு செய்பவர்கள், அதை முடித்த பின்னர், தேர்வின் நான்கு பிரிவுகளுடைய அணுகலையும் பெற முடியும். இத்தகைய மாதிரி முறையில், படித்தல் மற்றும் கவனித்தல் பிரிவுகளுக்கு நாமே பதில் கூறலாம், எழுதுதல் மற்றும் பேசுதல் பிரிவுகளுக்கு மாதிரி பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

தாள்வழி தேர்வுக்கு 2.30 மணித்துளிகள் கொடுக்கப்படும். பிரிவுவாரியாக இந்த நேரம் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கேள்விகளை தேர்ந்தெடுத்து எழுதலாம். தாள்வழி தேர்வில் ஆங்கில எழுத்து தேர்வு தேவை.

தேர்வு மற்றும் உங்கள் மதிப்பெண்ணை கணக்கிடுதல்: டோபல் தேர்வுக்கான மதிப்பெண் வெளிப்படையானது மற்றும் நம்பகமானதாக இருக்கும். தேர்வெழுதியவரின் ஆங்கில பேச்சுத்திறன் பதிவு செய்யப்பட்டு, தேர்வு நிலையத்தில் இருக்கும் ஒரே நிபுணருக்கு பதிலாக, ஆறு நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த தேர்வின் நம்பகத்தன்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் தனிச்சிறப்புகளுக்காகவே இதை பலர் தேர்வு செய்வதாக, கல்வி தேர்வு சேவை அமைப்பு கூறுகிறது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 11,000 கல்வி நிறுவனங்கள் இந்த தேர்வு மதிப்பெண்களை, மாணவர்களை சேர்ப்பதற்கான அளவுகோலாக எடுத்துக்கொள்கின்றன. அவற்றில் உலகின் முதன்மையான 100 பல்கலைக்கழகங்களும் அடங்கும்.

மதிப்பீட்டு முறையில், கல்வி தேர்வு சேவை அமைப்பானது, மனித திருத்துனர்களையும் மற்றும் தானியங்கு திருத்து முறைகளையும் பயன்படுத்துகிறது. தேர்வில் பலதரப்பட்ட அம்சங்கள், சிந்தனைத் திறன் மதிப்பீடு மற்றும் ஒழுங்குமுறைகளை மதிப்பிட்டு வரையறுக்க மனித திருத்துநர்கள் முக்கியம் என்று கல்வி தேர்வு சேவை அமைப்பு நிர்வாகிகளும், நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

கல்வி தேர்வு சேவை அமைப்பின் திருத்துநர்கள் சிறப்பாக பயிற்சியளிக்கப்பட்டவர்கள், சான்றிதழ் தேர்வு தேறியவர்கள். தேர்வை முடித்தவுடன், தேர்வு எழுதியவர் தனது மதிப்பெண்களை ரத்துசெய்ய முடியும். ஆனால் குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கான மதிப்பெண்களை மட்டும் ரத்துசெய்ய முடியாது. மதிப்பெண்ணை ரத்துசெய்வதன் மூலம் உங்களுக்கும் அல்லது எந்த கல்வி நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படாது. அதேசமயம் ரத்துசெய்த மதிப்பெண்களை மீண்டும் பெறலாம். ஒருவர் தேர்வு முடித்த 14 மணி நேரங்களுக்குள் முடிவுகளை ஆன்லைனில் பெறலாம்.

தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்:

இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்காக பல தரப்பு செய்திகளைக் கொண்ட உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை தொடர்ந்துப் படித்தல் அவசியமாகும். உங்கள் ஆங்கில வார்த்தை வளத்தை அதிகரித்து கொள்ளவும். மேலும் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள் பார்ப்பதன் மூலமும், ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதன் மூலமும் புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.

இவை அனைத்தையும் செய்யும் மாணவச் செல்வங்கள் டோபல் தேர்வில் வெற்றி காண முடியும். அப்புறம் என்ன....இந்தத் தேர்வை எழுதி வெற்றி பெறுங்க....ஜாலியா போய் வெளிநாடுகளில் படித்து வளம் பெறுங்க....

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Test of English as a Foreign Language (TOEFL) is a standardized test to measure the English language ability of non-native speakers wishing to enroll in English-speaking universities. The test is accepted by more than 11,000 universities and other institutions in over 190 countries and territories. TOEFL is one of several major English-language tests worldwide, including IELTS, Duolingo English Test, Cambridge Assessment English, and Trinity College London exams. TOEFL is a trademark of the Educational Testing Service (ETS), a private non-profit organization, which designs and administers the tests. ETS issues official score reports which are sent independently to institutions and are valid for two years following the test.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+