பள்ளிகளில் பணிபுரிய உதவும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான(டிடெட்) மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள தமிழக பள்ளிக்கல்வித் துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த டிடெட் படிப்பை படிக்க விரும்புவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி படிப்பில் சேர முடியும்.
இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் 26 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், தொடக்க கல்வி பட்டய படிப்புக்கு, அதாவது டிடெட் படிப்புக்கு 1,740 இடங்கள் உள்ளன. இதேபோல், 12 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 980 இடங்களும், 24 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1,450 இடங்களும் அமைந்து உள்ளன.

இவற்றில் 2024-25 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி அரசுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி மைய இயக்குநர் கருத்துருவை அனுப்பியிருந்தார். அதையேற்று, உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தொடக்க கல்வி பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள தமிழக அரசின் சார்பில் தற்போது அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், டிடெட் படிப்பில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் மே 30-ம் தேதிக்குள் பெற்று, அவற்றின் மீதான பரிசீலனையை ஜூன் 3-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மதிப்பெண், சாதிவாரியாக மாணவர்கள் ஜூன் 7-ம் தேதி தேர்வு செய்யப்படுவர். அதன்பின் வகுப்புகள் ஜூன் 14-ம் தேதி தொடங்கி நடைபெறும். இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கற்பித்தல் பயிற்சிகள் ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் நடத்தப்படும். மேலும், பொதுத் தேர்வு ஜூன், மே மாதங்களில் நடைபெறும்.
இதுதவிர அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பூர்த்தியாகாமல் இருந்தால் அதை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களே உடனடி சேர்க்கை மூலம் நேரடியாக நிரப்பிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், நடப்பாண்டு டி.டெட் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
அதன்படி முதலாமாண்டு மாணவர் சேர்க்கையானது ஒரு மாதம் முன்பாக ஜூனிலேயே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப இந்தப் படிப்புக்கான கல்வியாண்டு ஜூன் முதல் அடுத்தாண்டு மே வரை மேற்கொள்ளப்படும். எனினும். வழக்கம்போல் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை முதல் ஜூன் வரை கல்வியாண்டு அமையும்.
இவ்வாறு தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












