தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ பிரதானத் தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி முகாம் சென்னையில் ஏப்ரல் 1 முதல் மே 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வை தமிழக அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் பலர் எழுதினர். அதில் 39 மாணவர்கள் அடுத்தகட்டமாக ஜேஇஇ பிரதானத் தேர்வு (அட்வான்ஸ்டு) எழுதுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு மாநில அளவில் சிறப்பு பயிற்சி முகாம் உண்டு, உறைவிட வசதியுடன் சென்னையில் ஏப்ரல் 1 முதல் மே 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தகவலை சார்ந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவித்து பயிற்சியில் கலந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்றுதர வேண்டும். சென்னை முகாமுக்கு அவர்கள் மார்ச் 30-ம் தேதிக்குள் வர வேண்டும். இதற்கான பயண ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட அரசு மாதிரி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இதுசார்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுரைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி முகாம் கடந்த மார்ச் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












