சென்னை கிண்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் புதிதாக உயர் ரத்த அழுத்த மேலாண்மை குறித்த ஓராண்டு பயிற்சி படிப்பு தொடங்கப்பட உள்ளது. இத்தகவலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவில் 4 பேரில் ஒருவர் உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய், மாரடைப்பு போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், இதயத்துக்கு செல்லும் ரத்தம், ஆக்சிஜன் அளவு குறையும். இதன் காரணமாக, நெஞ்சுவலி, மாரடைப்பு, இதய துடிப்பில் மாற்றம், இதயம் - சிறுநீரக செயலிழப்பு, திடீர் உயிரிழப்பு ஆகியவை ஏற்படலாம்.
இதைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 'உயர் ரத்த அழுத்த மேலாண்மை' தொடர்பான ஓராண்டு பயிற்சி படிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை விரைவில் நாங்கள் வெளியிடுவோம்.
இந்தப் பயிற்சிப் படிப்பில் எத்தனை பேர் சேர்க்கை பெறுவர் என்பது தொடர்பான விவரங்களும் விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications












