தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற https://www.tnpoly.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு பெறலாம். மேலும் இதே இணையதளத்தில் விண்ணப்பங்களையும் மாணவச் செல்வங்கள் அனுப்பலாம்.
தற்போது தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளுக்கு 19,530 காலி இடங்கள் மாணவர்களுக்காகக் காத்திருக்கின்றன.
இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் கடந்த மே 10-ம் தேதி தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
இதுவரை முதலாமாண்டு பட்டய படிப்புகளுக்கு 12,582 மாணவ, மாணழிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், பகுதிநேர பட்டயப் படிப்புகளுக்கு 191 பேரும், நேரடி 2-ம் ஆண்டு படிப்பில் சேர 12,043 பேரும் விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டைவிட தற்போது டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கான மாணவர்களின் விண்ணப்பப் பதிவு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இதற்கிடையே பாலிடெக்னிக் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றைய தினம் (மே 24) நிறைவு பெறுவதாக இருந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் மே 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் https://www.tnpoly.in/ எனும் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.
மேலும், விண்ணப்பித்தவர்களில் தகுதியுடையவர்களின் தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்பட்டு டிப்ளமோ படிப்புகளுக்கான சேர்க்கை நடத்தப்படும். மேலும், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












