பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் சிறப்பு பிஎஸ்சி படிப்பை பல மாணவர்கள் விரும்பிப் பயன்று வருகின்றனர். இந்த சிறப்பு பிஎஸ்சி படிப்புக்கு வரும் ஜுன் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு www.unom.ac.in என்ற இணையதளத்தை மாணவர்கள் தொடர்புகொள்ளலாம்.
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள மிகப் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. இது 1851-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவிலேயே உள்ள மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று என்ற சிறப்புப் பெருமையைப் பெற்றுள்ளது. லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டு பெருமை பெற்றதாக அமைந்துள்ளது.

தொடக்கத்தில் இந்த பல்கலை.யில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலமாக தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.
தற்போது கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பிரிவுகள் இங்கு இயங்கி வருகின்றன. மேலும் தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாகத் தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இப்பல்கலைக்கழகம், மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டதாக செயல்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு கால சிறப்பு பிஎஸ்சி படிப்பு (B.Sc. (Blended) தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதில் சேரும் மாணவ, மாணவிகள் முதல் 2 ஆண்டுகள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை பொதுவாக எடுத்துப் பயில வேண்டும்.
அதே நேரத்தில் மாணவர்கள், இறுதி ஆண்டில் இயற்பியல் அல்லது வேதியியல் பாடத்தை சிறப்பு பாடமாக எடுக்க வேண்டும். இந்த பிஎஸ்சி பிளெண்டட் படிப்புக்கு அதிக வரவேற்பு உள்ளது. மாணவர்கள் பலர் இதில் ஆர்வமாக சேர்ந்து பயின்று வருகின்றனர்.
இந்த சிறப்பு பிஎஸ்சி படிப்பில், வரும் கல்வி ஆண்டில் (2024-2025) சேருவதற்கு ஜுன் மாதம் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் www.unom.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












