சென்னையில் உள்ள புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் வாகன போக்குவரத்து தொடர்பான புதிய இணையவழி எம்டெக் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை https://code.iitm.ac.in/emobility என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (Indian Institute of Technology Madras) தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஓர் உயர்கல்வி நிறுவனமாகும் இது. மத்திய அரசினால் தேசிய இன்றியமையாத கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும்.

1959ஆம் ஆண்டு அப்போதைய மேற்கு ஜெர்மனி அரசின் பணஉதவி மற்றும் நுட்ப உதவியுடன் இது நிறுவப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் ஆணையால் நிறுவப்பட்ட மற்றும் நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் மூன்றாவதாக நிறுவப்பட்டது. ஏராளமான கல்வி நிபுணர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கிய பெருமையை உடையது சென்னை ஐஐடி.
சென்னை ஐஐடி-யானது, 2.5 சதுர கிலோமீட்டர் (620 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது. இது முற்காலத்தில் கிண்டி தேசியபூங்கா இருந்த வளாகத்தில் அமைந்திருந்தது. முற்றிலும் கல்விக்கூட வளாகத்தில் தங்கிப் படிக்கும் கல்விக்கூடமாகிய இக்கழகத்தில் ஏறத்தாழ 360 ஆசிரியர்கள்,4000 மாணவர்கள் மற்றும் 1,250 நிர்வாகத் துணை அலுவலர்கள் உள்ளனர். 1961-ம் ஆண்டில் நாடாளுமன்ற ஆணைப் பெற்ற நாளிலிருந்து ஐஐடி சென்னை, நாட்டின் கற்பித்தல்,ஆய்வு மற்றும் தொழில் அறிவுரைத் துறைகளில் முதன்மை மையமாக வளர்ந்துள்ளது.
ஐஐடி சென்னை, வளாகத்தின் பெரும்பகுதி பாதுகாக்கப்பட்ட காடுகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் அருகில் இருக்கும் கிண்டி தேசிய பூங்காவால் பொலிவுபெறும் இவ்வளாகத்தைப் புள்ளி மான்கள், கலைமான்கள், புல்வாய் மான்கள், குரங்குகள், சில வகை ஆமைகள் மற்றும் சில வனவிலங்குகள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன. இவ்வளாகத்தில் அமைந்திருக்கும் ஓர் எழில்மிகு ஏரி, அதிக மழை நீரைச் சேகரிக்கும் பொருட்டு 1988 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் தூர்வாரப்பட்டது.
இந்த சிறப்புவாய்ந்த சென்னை ஐஐடி என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ஐஐடி-யில்தான் தற்போது புதிய எம்.டெக் படிப்பு இணையம் வழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வேலை செய்து கொண்டு இருக்கும் தொழில் வல்லுநர்களுக்கான இந்த சிறப்பு வாய்ந்த படிப்பு, மெட்ராஸ் ஐஐடி-யில் ரெகுலர் முறையில் வழங்கப்படும் எம்டெக் படிப்புக்கு இணையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், ஆய்வக பணி, புராஜெக்ட் பணி உள்ளிட்டவையும் இடம்பெறும். எனவே, இந்த சிறப்பு வாய்ந்த எம்.டெக் படிப்பை, வேலை பார்க்கும் இளைஞர்கல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த எம்.டெக் படிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த சிறப்புவாய்ந்த படிப்பில் சேர மே 26-ம் தேதிக்குள் ஆன்லைனில் (https://code.iitm.ac.in/emobility) விண்ணப்பிக்க வேண்டும்.
மெட்ராஸ் ஐஐடி சார்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












