தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் விளக்கியுள்ளனர். முதலில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவு செய்துகொள்வது,பின்னர் தேர்வுக்கு விண்ணப்பிப்பது என படிப்படியாக நாம் செல்லவேண்டும் என்று நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும்.
இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1929-ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு இது செயல்பட்டு வருகிறது. அப்பொழுது இதன் பெயர் The Madras Service Commission ஆகும். மாநில மறுசீரமைப்புக்குப் பின் 1957-ல் இது மதராஸ் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Madras Public Service Commission) என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்று, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு இதுவும் தானாகவே "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்" என்று மாறிவிட்டது.
தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. இவர்களின் பணிவிதிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒழுங்குமுறை சட்டம்,1954-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன.

பணிகள் என்ன....
தேர்வாணையம் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதன் விவரங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 320-இல் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய அளவில் மத்திய அரசுப் பணியாளர் பொதுப் தேர்வாணையம் செயல்படுவது போல் தமிழக அளவில் இது செயல்படுகிறது. அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் அல்லது இது போன்ற முதன்மைப் பணிகளுக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யும் பணிகளைச் செய்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றார் அதன்பிறகு தற்போது வரை யாரும் நியமிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் உள்ள அனைத்து வகையான பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி.) தேர்வுகளை சீரிய முறையில் நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. இதன்படி ஆண்டு தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் செயலாளர்களிடம் இருந்து காலிப்பணியிட விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன, அதற்கேற்றபடி ஆண்டு அட்டவணை வெளியிட்டு, தேர்வுகள் நடத்தி ஆட்கள் பணியிடங்களில் நிரப்ப படுவார்கள்
அந்த வகையில் 2023-24-ம் ஆண்டில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை பட்டியலிட வேண்டும் என சமீபத்தில் நடந்த துறைசார்ந்த செயலாளர்கள் கூட்டத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பாக முன்வைக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் அனைத்து துறைசார்ந்த செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் , அனைத்து அரசு துறை செயலாளர்களும் நேரடி ஆட்சேர்ப்பின் கீழ் உள்ள பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் விவரங்களை அனுப்பும் செயல் முறையை விரைவுபடுத்த வேண்டும். மேலும் 2023-24-ம் ஆண்டு வரையில் குரூப்-2, 2ஏ, 4 ஆகிய பணியிடங்களுக்கான காலியிடங்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை மனிதவள மேலாண்மைத்துறைக்கும் வருகிற 27-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
விவரங்களை கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து. தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசில் தற்போது காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்காகவே தற்போது 'குரூப் - 4' தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ளது.
குரூப்-4 தேர்வில் உள்ள பணியிடங்கள் என்ன?
தற்போது நடைபெறவுள்ள குரூப்-4 தேர்வில் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், வனக்காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்குத்தான் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் - 4 தேர்வுகளை அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வின் மூலம் மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில், 108 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களும், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்களும், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வின் மூலமாக 6244 காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டு இருக்கிறது. மேலும், தேர்வாளர்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் மிகக்குறைவான பணியிடங்களே நிரப்ப இருக்கும் நிலையில் தீவிர முயற்சி பெற்றால் மட்டுமே முழுமதிப்பெண் பெற்று தேர்வை எதிர்கொள்ள முடியும். மேலும், அனைத்து பாடத்திட்டங்களுக்கும் முழு முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள். எனவே, தேர்வர்கள் திட்டமிட்டு, அட்டவணைகளைத் தயார் செய்து முழுமூச்சுடன் படிப்பில் இறங்கவேண்டும்.
புதிய வழிமுறைகள்
இந்த ஆண்டு வெளியான அறிவிப்பில் புதிதாக வன காவலர் மற்றும் வனக்காப்பாளர் என்ற பதவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் பலரும் விண்ணப்பிக்க தொடங்கியுள்ள நிலையில் விண்ணப்பத்தில் நாம் பணியாற்ற விரும்பும் பதவியை தேர்வு செய்து கொள்ள புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, வனக்காப்பாளர் பதவிக்கு 363 காலிடங்களும், வனக்காவலர் பதவிக்கு 814 காலியிடங்களும் உள்ளன. இவைகளில் மட்டும் சேர விரும்பினால் அதற்கான விருப்பத்தையும், அனைத்து பதவிகளிலும் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்ய தயாராக இருந்தால் அதற்கான விருப்பத்தையும், வனத்துறை பதவி வேண்டாம் என்றால் அதற்கான விருப்பத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி வாரியம் விண்ணப்ப வழிமுறை படிவத்தில் தெரிவித்துள்ளது.
கடைசி தேதி
குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. பிப்ரவரி 28-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களில் மாற்றங்கள், திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் மார்ச் 4-ம் தேதி முதல் ஆறாம் தேதிக்குள் அந்தத் திருத்தங்களைச் செய்ய நமக்கு வாய்ப்பளிக்கப்படும். எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 9-ம் தேதி காலை ஒன்பதரை மணி முதல் நண்பகல் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?
இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இந்த இணையதளத்தில் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.
அதாவது தேர்வர்களின் விவரங்களை அதில் பதிவு செய்யவேண்டும். பெயர், தந்தை பெயர், பிறந்ததேதி, கல்விச்சான்றிதழ் விவரங்கள், எந்தப் பிரிவைச் சேர்ந்தவர், திருமணமானவரா, ஆதார் விவரங்கள் போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.
மேலும், இதனை ஒருமுறை செய்தால் போதுமானது. தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்த பிறகே, விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய முடியும் என்பதால் இதை அவசியம் செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் நேரடியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்குச் செல்லலாம்.
கவனிக்கவேண்டியவை...
தேர்வர்கள் ஒரு முறை பதிவின் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
TNPSC விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி தளத்தில் தங்களுடைய தகவல்களை முதல் முறையாகப் பதிவுசெய்யும் போது, மூன்று மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட தங்கள் புகைப்படத்தை ஸ்கேன் செய்து தயாராக வைத்திருத்தல் அவசியமாகும்.
இதில் பதிவு செய்வது, எந்தப் பதவிக்கும் விண்ணப்பிப்பது ஆகாது என்பதையும் மனதில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் மின்னஞ்சல் (இமெயில்) முகவரியும் மொபைல் எண்ணும் கண்டிப்பாக பதிவு செய்வதற்குத் தேவைப்படும்.
தங்கள் வசம் எந்த மின்னஞ்சல் முகவரியும் இல்லாதவர்கள், புதிதாக ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
ஆதார் எண்ணையும் பதிவுசெய்ய வேண்டும்.
வனக்காவலர்
மேலும், இந்தத் தேர்வின் மூலம் வன காவலர், வன கண்காணிப்பாளர்(Forest Guard / Forest Watcher) ஆகிய பணியிடங்களையும் டிஎன்பிஎஸ்சி நிரப்ப உள்ளது. ஆகவே, விண்ணப்பத்தை நிரப்பும் போது இந்தப் பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க விரும்புவோர், அதற்கேற்றபடி பணியிடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஒருவேளை வனக்காவலர், வனக் கண்காணிப்பாளர் ஆகிய பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பவில்லை என்னும் நபர்கள், "Posts other than Forest Guard / Forest Watcher" என்ற வாய்ப்பைத் தேர்வு செய்வது அவசியமாகும்.
அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர், "All the Posts" என்ற வாய்ப்பைத் தேர்வுசெய்ய வேண்டும்.
ஒவ்வொரு பணியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தேர்வாணையம் தெரிவித்திருந்தாலும் இந்த எண்ணிக்கையை தேர்வாணையம் கூட்டவோ, குறைக்கவோ முடியும் என்று கல்வியாளர்களும், நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
மறுமுறை சரிபார்த்தல்
விண்ணப்பங்களை முழுவதுமாக நிரப்பிய பின்னர் சம்மிட் என்று கேட்கும். அதற்கு முன்னதாக நீங்கள் பதிவு செய்த விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு, 2 முறை மீண்டும் சரிபார்க்க வேண்டும்.
அப்போது நாம் ஏதெனும் தவறு செய்திருந்தால் அதைத் திருத்திக் கொள்ளலாம்.
திருத்துவதற்கு வாய்ப்பு
ஒருவேளை நாம் விண்ணப்பத்தை அனுப்பிய பின்னர் அதில் தவறு இருப்பது தெரியவந்தால் திருத்துவதற்கு வாய்ப்பு தரப்படுகிறது. தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களில் மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் மார்ச் 4-ம் தேதி முதல் 6-ம் தேதிக்குள் அந்தத் திருத்தங்களைச் செய்ய நமக்கு வாய்ப்பளிக்கப்படும். அதைப் பயன்படுத்தி தேவையான திருத்தங்களை நாம் செய்துகொள்ள முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முடிவுரை..
விண்ணப்பத்தை மட்டும் நாம் முறையாக அனுப்பினால் மட்டும் போதாது. தேர்வுக்கும் நல்ல முறையில் தயாராகி வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications












