பிபிஏ எனப்படும் வணிக நிர்வாக இளங்கலைப் படிப்பை படிக்க வேண்டும் என்பது பல மாணவ, மாணவிகளின் கனவாக உள்ளது. பிபிஏ என்பது இளநிலை வணிக நிர்வாகப் படிப்பு ஆகும். ஆங்கிலத்தில் Bachelors in Business Administration என்று அழைக்கப்படுகிறது. இது மூன்றாண்டு பட்டப்படிப்பு. பன்னிரண்டாம் வகுப்பில் கலை, அறிவியல், வணிகவியல் என எந்த படிப்புகள் படித்தாலும், பிபிஏ.,வில் சேர முடியும்.
மற்ற படிப்புகளைப் போலவே பிபிஏ படிப்புகளுக்கும் பிரத்யேக கல்லூரிகளும், நுழைவுத்தேர்வுகளும் உண்டு. ஆனால், பல மாணவ, மாணவிகளுக்கு இது தெரிவதில்லை. பிபிஏ படிப்புக்கு UGAT, IPMAT, FEAT, BHU UET, NPAT, AUMAT போன்ற நுழைவுத்தேர்வுகள் உண்டு. மேனேஜ்மென்ட் துறையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி காண்பதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியும்.
பிபிஏ படித்தவர்களுக்கு அனைத்து நிறுவனங்களிலும் வரவேற்பு உண்டு. அதே நேரத்தில் எந்த கல்லூரியில், எப்படி படித்திருக்கிறோம், எந்த திறன்களை வளர்த்துள்ளோம் போன்றவை மிகமிக முக்கியமானவையாக அமைந்துள்ளது. எச்ஆர் மேனேஜ்மென்ட், ஃபைனான்ஸ், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங், தகவல் தொழில்நுட்பம் என பல்துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. பிபிஏ முடித்தவர்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 3 லட்சம் வரையில் சம்பளம் பெற முடியும். நல்ல நிறுவனங்களில் சேரும் பட்சத்தில், அதற்கும் கூடுதலாக பணம் ஈட்ட முடியும்.
இந்தப் படிப்பை சிறந்த கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்பதும் அவர்களின் தீராத ஆசையாக உள்ளது.
வணிக நிர்வாகத்தின் இளங்கலை (BBA) படிப்பான பிபிஏ படிப்பின் பாடத் திட்டங்கள், சூழ்நிலைகளை பகுப்பாய்வு செய்வதற்கும், தொடர்புகொள்வதற்கும், ஒரு பெரிய பார்வையாளர்களுக்கு முன்னால் ஒருவரின் சொந்தக் கருத்துக்களை முன்வைப்பதற்கும் மையமாகக் கொண்டுள்ளது.
மேலும், அளவு மற்றும் தரமான காரணிகளைப் பயன்படுத்தி முடிவுகளை எடுப்பதற்கும், பல்வேறு செயல்பாட்டுப் பகுதிகளின் முழுமையான பார்வையை வளர்ப்பதற்கும் மாணவர்களின் திறனை மையமாகக் கொண்டு இந்தப் பாடத் திட்டம் அமைந்துள்ளது.
இந்த பாடத்திட்டத்தில், கட்டமைப்பில் பல நேரடி தொழில் திட்டங்கள், தீவிர தொழில் பயிற்சி, நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளின் ஆய்வுகள், உலகளாவிய திட்டங்கள் மற்றும் கணினி தகவல் அமைப்பு, நிதி, சர்வதேச வணிகம், சந்தைப்படுத்தல், பரந்த அளவிலான துறைகளில் நிபுணத்துவம், வணிகத்தில் நிபுணத்துவம் ஆகியவை அடங்கும்.
இந்த பட்டப் படிப்பானது வணிகத் துறை அல்லது கார்ப்பரேட் வேலையில் தொழில் தேடும் மாணவர்களால் மேலாண்மைத் துறையில் உயர்கல்வியை நோக்கி ஒரு படியாகக் கருதப்பட்டு வருகிறது.
பிபிஏ படிப்புகளை வழங்கும் சிறந்த கல்லூரிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளன. கல்வித் திறன், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வியின் தரம் ஆகியவற்றைச் சரிபார்த்த பிறகு, கீழேயுள்ள பட்டியல் ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

1. கிறிஸ்து பல்கலைக்கழகம், பெங்களூரு
பெங்களூருவில் அமைந்துள்ள கிறிஸ்து கல்லூரி அல்லது கிறிஸ்து பல்கலைக்கழகம் பிபிஏ படிப்புக்கு மிக முக்கியமான கல்லூரிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இது நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு இணையாது. இந்தக் கல்லூரியை கார்மேலைட்ஸ் ஆஃப் மேரி இம்மாகுலேட் (சிஎம்ஐ) கல்வி அமைப்பு நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த கல்வி அமைப்பை சர்ச் ஆஃப் சவுத் இண்டியா (சிஎஸ்ஐ) நிர்வகித்து வருகிறது. பிபிஏ படிப்பை வழங்கும் நாட்டில் உள்ள மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
2. எஸ்விகேஎம்எஸ், குளோபல் கேம்பஸ், நவி மும்பை.
எஸ். நர்சி மான்ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் என்று அழைக்கப்படும் எஸ்விகேஎம்எஸ் கல்வி நிறுவனமானது மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் அமைந்துள்ளது. 1981-ல் நிறுவப்பட்ட இந்த நிறுவன வளாகத்தில் எஸ்விகேஎம் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இது டெல்லி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. நாட்டில் பிபிஏ படிக்க மிகச் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இது திகழ்கிறது.
3. மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி (எம்சிசி), சென்னை
தமிழகத்தின் சென்னையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி. தாம்பரத்தில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி பிபிஏ உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு புகழ்பெற்றது. சென்னையில் 1837-ம் ஆண்டு சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்தால் இந்தக் கல்லூரி நிறுவப்பெற்றது. இந்தியாவின் இளம் தலைமுறையினருக்கு உண்மையான கிறிஸ்தவ உணர்வில் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கல்லூரி நிறுவப்பட்டது.
4. மவுண்ட் கார்மேல் கல்லூரி (தன்னாட்சி), பெங்களூரு
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ளது மவுண்ட் கார்மேல் கல்லூரி. பெங்களூரு நகரில் எம்எம்சி என்ற பெயரில் மிகவம் பிரபலமான கல்லூரியாக விளங்கும் இந்த கார்மேல் கல்லூரி பயிற்றுவிக்கப்படும் பிபிஏ படிப்பு பயில ஏராளமானோர் போட்டி போடுகின்றனர். 1948-ல் இந்தக் கல்லூரியை, செயின்ட் தெரசா அமைப்பின் கார்மேலைட் சகோதரிகள் நிறுவினர். பெண் குழந்தைகளுக்கு தரமான உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கல்லூரி நிறுப்பட்டது.

5. யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மேனெஜ்மெண்ட் ஸ்டடீஸ், ஜிஜிஎஸ்ஐபியு பல்கலைக்கழகம், டெல்லி
டெல்லியில் அமைந்துள்ளது யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மேனெஜ்மெண்ட் ஸ்டடீஸ், ஜிஜிஎஸ்ஐபியு பல்கலைக்கழகம் பிபிஏ உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு புகழ்பெற்றதாக அமைந்துள்ளது. குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான பள்ளியாக இந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. டெல்லி மாநில அரசாங்கத்தால் இது நிர்வகிக்கப்படுகிறது. மேலும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அமைப்பால் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
6. ஷாஹீத் சுக்தேவ் காலேஜ் ஆஃப் பிசினஸ் ஸ்டடீஸ், யுனிவர்சிட்டி ஆஃப் டெல்லி
டெல்லியில் அமைந்துள்ள ஷாஹீத் சுக்தேவ் காலேஜ் ஆஃப் பிசினஸ் ஸ்டடீஸ் பிபிஏ உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை அள்ளித் தருகிறது. 1987-ல் இது நிறுவப்பட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தின் அங்கமாக இது அமைந்துள்ளது. டெல்லி மாநில அரசால் நிர்வகிக்கப்படும் இந்தக் கல்லூரி, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழும், பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழும் வருகிறது.
மேலாண்மை, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உயர்கல்வியை இந்தக் கல்லூரி வழங்குகிறது.
7. அமிட்டி யுனிவர்சிட்டி, நொய்டா
நொய்டாவில் அமைந்துள்ள அமிட்டி பல்கலைக்கழகம் பிபிஏ உள்ளிட்ட சிறந்த படிப்புகளை நாட்டின் மாணவ, மாணவிகளுக்காக வழங்கி வருகிறது. தேசிய அளவில் இந்த பல்கலைக்கழகம் 63-வது இடத்தைப் பெற்றுள்ளது. 2022-ல் வெளியான நேஷனல் இன்ஸ்டிடியூஷனல் ரேங்க்கிங் பிரேம்வொர்க்கில் இந்த கல்லூரி 63-வது இடத்தைப் பெற்று தன்னிகரற்று விளங்குகிறது. 1955-ம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகம் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தோற்றுவிக்கப்பட்டது.

8. சிம்பியாசிஸ் இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்துடன் சிம்பியாசிஸ் இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி பல்வேறு உயர்கல்வியை மாணவ, மாணவிகளுக்காக வழங்கி தன்னாட்சி புரிந்து வருகிறது. 2002-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் முல்ஷியில் இது நிறுவப்பட்டது.
9. பாரதி வித்யாபீடம்
1964-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் இந்த பாரதி வித்யாபீடம் உயர்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஏஐசிடிஇ, யுஜிசி, என்ஏஏசி, ஏஐயு கல்வி அமைப்புகளின் அங்கீகாரத்துடன் மிகச் சிறந்தக் கல்லூரிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. இங்கு பிபிஏ, எம்பிஏ உள்ளிட்ட உயர் நிலைப் படிப்புகள் மாணவர்களுக்கு தரமான நிலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
10. அனில் சுரேந்திரா மோடி ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்
அனில் சுரேந்திரா மோடி ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் உயர்கல்வி நிறுவனமானது மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகிலுள்ள பார்லே பகுதியில் அமைந்துள்ளது. 2007-ம் ஆண்டு இது தோற்றுவிக்கப்பட்டது. இந்த கல்வி நிறுவனத்தை நர்சி மான்ஜி கல்வி அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.
பிபிஏ, எம்பிஏ உள்ளிட்ட உயர்படிப்புகளை இந்த நிறுவனத்தில் பெறுவது சிறப்பாக இருக்கும் என மாணவ, மாணவிகள் விரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications












