தமிழகத்தில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உட்பட 19 வகை துணை மருத்துவ படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பம் பதிவு செய்யும் பணி தொடங்கியது. ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவச் செல்வங்கள் இந்தப் படிப்புகளுக்கு உடனடியாக அப்ளை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
தமிழக அரசு சார்பில் உள்ள ஏராளமான அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு, மொழி, நோய் குறியியல்), பிபிடி, பிஎஸ்சி கிளினிக்கல் நியூட்ரிஷியன், பிஎஸ்சி கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இவற்றில், அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 15 ஆயிரம் இடங்களும் உள்ளன.
இந்நிலையில், அந்த இடங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்த பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் போன்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் கூறியதாவது:
பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் போன்ற துணை மருத்துவப் படிப்புகளுக்காக தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இவ்வாறாக இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு (கவுன்சிலிங்) முடிந்த பிறகு, துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஏற்பாடுகளை மருத்துவக் கல்வி இயக்குநரம் செய்துவருகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications












