நாட்டில் முதல் 10 இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் எவை தெரியுமா...?
நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கு எப்போதுமே மவுசுதான். அது அரசு மருத்துவக் கல்லூரியாக இருந்தாலும் சரி, தனியார் மருத்துவக் கல்லூரியாக இருந்தாலும் சரி. அந்தப் படிப்புக்கு உள்ள மகத்துவம் இதுவரை குறையவே இல்லை. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அதனால் கடந்த 10 ஆண்டுகளில் மாநிலம் தோறும் கூடுதல் அரசு மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசுகளும், மத்திய அரசும் தொடங்கி வருகிறது.
இந்நிலையில் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதல் 10 இடங்களில் உள்ள கல்லூரிகள் எவை என்பதை நேஷனல் இன்ஸ்டிடியூஷனல் ரேட்டிங் ஃப்ரேம்வொர்க் (என்ஐஆர்எஃப்) பட்டியலிட்டுள்ளது.
இது 2023-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தரவரிசை ஆகும். இந்த தரவரிசையை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.
நேஷனல் இன்ஸ்டிடியூஷனல் ரேட்டிங் ஃப்ரேம்வொர்க் அல்லது என்ஐஆர்எஃப் எனப்படும் தர அமைப்பு கல்வி நிறுவனங்களின் தரவரிசையை நிறுவுவதற்கு கல்வி மற்றும் பிற தொடர்புடைய தரவுகளைப் பயன்படுத்தும் மதிப்பீட்டு முறையை கடைப்பிடித்து வருவது ஆகும்.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் (TLR), ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி (RP), பட்டப்படிப்பு முடிவுகள் (GO), அவுட்ரீச் மற்றும் உள்ளடக்கம் (OI) மற்றும் புலன் உணர்வு (PR) ஆகியவை நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு NIRF -ஆல் பயன்படுத்தப்படும் ஐந்து காரணிகளாக அமைந்துள்ளது. இந்தியாவில் ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் இருப்பதால், மாணவர்களும் பெற்றோர்களும் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதில் சிரமம் கொண்டுள்ளனர். மருத்துவக் கல்லூரி தரவரிசை, கல்விசார் சிறப்பு, ஆராய்ச்சி வசதிகள், ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு பண்புகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிரது.
மாணவர்கள் மருத்துவப் பட்டம் படிக்கும் பள்ளி மருத்துவத் துறையில் அவர்களின் சாதனையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, தற்போது 12-ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்குத் தயாராகும் அனைத்து மாணவர்களும், அவர்களின் எதிர்கால நடவடிக்கையைத் தீர்மானிக்க உதவுவதற்காக, இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவக் கல்லூரிகளை ஆராய்ச்சி செய்யத் தொடங்க வேண்டும்.
தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் விவரம்.
1. டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
டெல்லியில் 1956-ல் அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. மருத்துவப் பட்டப்படிப்பு, உயர்கல்வியில் சிறந்து
விளங்கும் இந்த நிறுவனம் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சிறந்த மருத்துவர்களை உருவாக்கித் தருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியானது, மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைந்துள்ளன.
2. சண்டிகர் போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் எஜுகேஷன் அன்ட் ரிசர்ச்
சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் எஜுகேஷன் அன்ட் ரிசர்ச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது தரவரிசையில் 2-வது இடத்தில் அமைந்துள்ளது. 1962-ம் ஆண்டு முதல் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியானது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இன்ஸ்டிடியூட்டாக அறிவிக்கப்பட்டது.

3. கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர்
தமிழகத்தின் வேலூரில் அமைந்துள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. 1900-ம் ஆண்டில் டாக்டர் இடா எஸ். ஸ்கட்டர் என்ற டாக்டரால் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த மிஷினரில் அமைப்பு மூலம் இந்தக் கல்லூரி சிறுபான்மையின பிரிவில் மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டாகவும் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சிறந்த டாக்டர்கள் இந்த மருத்துவமனை, கல்லூரி உருவாக்கித் தருகிறது.
4. நிமான்ஸ் மருத்துவமனை, பெங்களூரு
பெங்களூருவில் அமைந்துள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் அன்ட் நியூரோ சயின்ஸஸ் மருத்துவமனை 1925-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். சுருக்கமாக நிமான்ஸ் மருத்துவமனை என்று அழைக்கப்படும் இந்த மருத்துவக் கல்லூரி தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் ஏராளமான டாக்டர் மாணவர்களை உருவாக்கும் இந்தக் கல்லூரி, ஆண்டுதோறும் ஏராளமான ஏழை நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளித்து வருகிறது.

5. ஜிப்மர், புதுச்சேரி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஜிப்மர் எனப்படும் ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அன்ட் ரிசர்ச் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி நாட்டின் மருத்துவக் கல்லூரிகள் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி நாட்டின் மிகவும் பழமையான மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. 1823-ல் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை தற்போது 200-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. ஆண்டுதோறும் ஏராளமான தரம் வாய்ந்த டாக்டர்களை உருவாக்கி நமக்கு அளித்து வருகிறது.
6. அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் அமைந்துள்ள அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் மருத்துவக் கல்லூரியானது 2005-ல் தொடங்கப்பட்டது. என்ஐஆர்எஃப் தரவரிசையில் இந்தக் கல்லூரி 6-வது இடத்தைப் பெற்றுள்ளது. குறுகிய காலத்தில் தரமான சிகிச்சையை அளித்து மக்களிடையே நம்பிக்கையை இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ளது.
7. சஞ்சய் காந்தி போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ், லக்னோ, உ.பி.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தரவரிசையில் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது. 1983-ல் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரியில் டிஎம், எம்சிஎச், எம்டி, பிஎச்டி, போஸ்ட் டாக்டோரல் ஃபெலோஷிப் படிப்புகள், போஸ்ட் டாக்டோரல் சர்ட்டிபிகேட் படிப்புகள் (பிடிசிசி) போன்றவை வழங்கப்படுகின்றன.

8. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகமான 1916-ல் தோற்றுவிக்கப்பட்டது. இது நாட்டின் மிகவும் பழமையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக அமைந்து மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. கலை, அறிவியல் படிப்புகளோடு, மருத்துவப் படிப்புகளையும் வழங்கி நாட்டின் முன்னோடியான மருத்துவக் கல்லூரியாக உள்ளது. தரவரிசையில் இது 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.
9. கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரி, மங்களூரு
கர்நாடக மாநிலம் மங்களூருவில் 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரி. இது தரவரிசையில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. மணிப்பால் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் எனப்படும் உயர்கல்வி நிறுவனத்தின் ஓர் அங்கமாக இந்த கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியாகும். இந்த மருத்துவக் கல்லூரிக்கு 1958-ல் இந்த மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் வழங்கியது. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான டாக்டர்களை உருவாக்கித் தரும் அற்புதமான இன்ஸ்டிடியூட்டாக போற்றப்படுகிறது.

10. ஸ்ரீ சித்திரைத் திருநாள் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் அன்ட் டெக்னாலஜி, திருவனந்தபுரம்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஸ்ரீ சித்திரைத் திருநாள் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் அன்ட் டெக்னாலஜி மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இது தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கக் கூடிய அற்புதமான மருத்துவக் கல்லூரியாக இது போற்றப்பட்டு வருகிறது.
11. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை
தமிழகத்தின் சென்னையில் அமைந்துள்ள மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) தரவரிசையில் 11-வது இடத்தைப் பிடித்துள்ளது. 1900-ம் ஆண்டு இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. தமிழகத்தின் தலைநகருக்கு அடையாளமாக விளங்கும் இந்த முன்னோடியான மருத்துவக் கல்லூரி ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தரமான டாக்டர்களை உருவாக்கி அளிக்கிறது.


Click it and Unblock the Notifications












