தரம்வாய்ந்த படிப்புகளான பிஎஸ் டேட்டா சயின்ஸ், பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் போன்ற ஆன்லைன் பட்டப் படிப்புகளில் சேர மே மாதம் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மெட்ராஸ் ஐஐடி அறிவித்துள்ளது. பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர https://study.iitm.ac.in/ds என்ற இணையதளத்திலும் பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பில் சேர விரும்புவோர் https://study.iitm.ac.in/es என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மெட்ராஸ் ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
மெட்ராஸ் ஐஐடி பிஎஸ் (டேட்டா சயின்ஸ்), பிஎஸ் (எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்) என்ற 2 பட்டப்படிப்புகளை ஆன்லைனில் வழங்கி வருகிறது. இதற்கு மாணவர்களிடையே நல்ல எதிர்பார்ப்பும், வரவேற்பும் உள்ளது. 4 ஆண்டுக் காலம் கொண்ட இப்படிப்புகளில் பிளஸ்-2 முடித்தவர்கள் சேரலாம். வயது வரம்பு எதுவும் கிடையாது. ஏதேனும் ஒரு படிப்பை ரெகுலர் வழியில் படித்துக்கொண்டும் இந்த ஆன்லைன் படிப்புகளைப் படிக்கலாம்.

ஃபவுண்டேஷன், டிப்ளமோ, பிஎஸ்சி பட்டம், பிஎஸ் பட்டம் என 4 நிலைகளை உள்ளடக்கிய இப்படிப்புகளில், படித்து முடிக்கும் பாடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமோ, பிஎஸ்சி பட்டம், பிஎஸ் பட்டம் வழங்கப்படும். இதில் சேர விரும்புவோருக்கு 4 வார பயிற்சி அளிக்கப்பட்டு இறுதியில் தகுதித்தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுவோர் ஆன்லைன் படிப்பில் சேர முடியும். பயிற்சிக் கட்டணத்தில் ஏழை மாணவர்களுக்கு 75 சதவீதம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
தற்போது உலக அளவில் டேட்டா சயின்ஸ் மற்றும் செமிகண்டக்டர் சிப் துறைகளில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அவற்றுக்கு தேவையான பட்டதாரிகளை உருவாக்கும் வகையில் இந்த ஆன்லைன் படிப்புகளுக்கான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் 3 பேட்ச்களாக நடைபெறுகிறது. அந்த வகையில் அடுத்த பேட்ச் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 26-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர https://study.iitm.ac.in/ds என்ற இணையதளத்திலும் பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பில் சேர விரும்புவோர் https://study.iitm.ac.in/es என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












