அமெரிக்காவில் உயர்கல்வி படித்து முன்னேற விரும்பும் மாணவர்களுக்கு விசா உள்ளிட்ட வசதிகளை அமெரிக்க அரசு வழங்கி வருகிறது. அமெரிக்காவில் படிப்பது என்றால் மாணவர்கள் குஷிதான். இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயில்கின்றனர். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று படிக்க அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் சீனாவைச் சேர்ந்தவர்கள் முதலிடத்திலும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 2-வது இடத்திலும் உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் சேவைப்பிரிவு(யுஎஸ்சிஐஎஸ்) அண்மையில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021-ம் ஆண்டில் அமெரிக்காவில் சீனாவைச் சேர்ந்த 3,48,992 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 2,32,851 பேரும் பயில்கின்றனர். அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களிலேயே அதிக மாணவர்கள் சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 21 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள். அமெரிக்காவில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களில் சேர இந்திய மாணவர்கள், குறிப்பாக தமிழக மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் இயங்கும் ஐ.ஐ.இ. எனப்படும் சர்வதேச கல்வி நிறுவனம் 'ஓப்பன் டோர்ஸ்' என்ற அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த நிறுவனம் 1919-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அந்த ஆண்டு முதல் அமெரிக்காவிலுள்ள சர்வதேச மாணவர்கள் குறித்த வருடாந்திர புள்ளிவிவர கணக்கெடுப்பை, இந்த சர்வதேச கல்வி நிறுவனம் எடுத்து வருகிறது.
1972 முதல் அமெரிக்க வெளியுறவு துறையின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பணியகத்துடன் இணைந்து இது செயல்படுவதுடன், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் அங்குள்ள கல்வித்திட்டங்களில் சேர்ந்துள்ள சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களையும் வெளியிடுகிறது.
அமெரிக்காவுக்குச் சென்று உயர்கல்வி பயில எளிய முறைகள் உள்ளன. முதலில் அமெரிக்கா சென்று பயில மாணவர் விசாவைப் பெறவேண்டும்.
மாணவர் விசாக்களின் விவரம், விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி, எப்படி பெறுவது போன்ற விவரங்கலை இங்கே பார்க்கலாம்.
பட்டப்படிப்பு, பட்டமேல்படிப்பு, பிஎச்.டி. படிப்பு போன்றவைகள் அமெரிக்காவில் பிரபலமாக உள்ளன. அமெரிக்காவில் கல்விசார் சிறப்புத் தரநிலைகள் பல்வேறு வகையான அறிவு, தகவமைப்பு மற்றும் அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்குகின்றன. அமெரிக்காவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் சிறந்த கல்வித் திட்டத்தைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அது அவர்களின் திறனை அதிகரிக்க அனுமதிக்கும் அதே வேளையில், மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு வகையிலும் பங்களிக்கிறது.
எஃப்-1 விசா
வாரம்தோறும் 18 மணி நேரம் பயிலும் படிப்பை விரும்பும் மாணவர்கள் எஃப்-1 விசாவைப் பெறவேண்டும். பட்டப்படிப்பு, எம்.எஸ்., எம்பிஏ போன்ற படிப்புகளுக்கு இது பொருந்தும். இந்த எஃப்-1 விசாவைப் பெற்றுள்ளவர்களின் மனைவி, குழந்தைகள் எஃப்-2 விசாவைப் பெற்று அவர்களுடன் செல்லலாம்.
அதேநேரத்தில் எஃப்-2 விசாவைப் பெற்றவர்கள் அங்கு வேலை பார்க்க அனுமதி கிடையாது.
ஜே விசா
ஜே விசாவைப் பெறுபவர்கள் சர்வதேச எக்ஸ்சேஞ்ச் டிராவலர்ஸ் என்று கருதப்படுபவர்கள். அவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், படிப்பு அடிப்படையிலான எக்ஸ்சேஞ்ச் திட்ட நிகழ்ச்சிகளும் இந்த விசாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எம்-1 விசா
இந்த எம்-1 விசா என்பது வக்கேஷனல்/நான்-அகாடமிக் மாணவர்களுக்கான விசாவாக அமைந்துள்ளது. இந்த விசா வைத்திருப்பவர்கள் வக்கேஷனல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளை மட்டுமே பயில முடியும். எஃப்-1, எம்-1 விசாக்களுக்குக்கு விண்ணப்பிக்கும் முறை ஒன்றேயாகும்.
இபி-5 விசா
இந்த விசா பெறுபவர்கள் படித்து முடித்த பின்னர் அமெரிக்காவில் குடியேற வழிவகை செய்யும். மேலும் அவர்கள் அங்கு கிரீன் கார்ட் உரிமையையும் பெறமுடியும். இதன்மூலம் அமெரிக்காவில் நிரந்தர குடியேற்றத்துக்கு வழிவகை கிடைக்கும். இந்த விசா பெறுபவர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யவேண்டும். மேலும் அமெரிக்க குடிமகன்கள் குறைந்தபட்சம் 10 பேருக்காவது முழு நேர வேலையை அளிக்கவேண்டும். இபி-5 விசா வைத்திருப்பவரின் மனைவி, குழந்தைகளும் இபி-5 விசாவுக்கு விண்ணப்பம் செய்ய முடியும்
விண்ணப்பம் செய்வது எப்படி?
நீங்கள் சேரும் கல்லூரி, பல்கலைக்கழகம், இன்ஸ்டிடியூட்கள் உங்களுக்கு I-20 விண்ணப்பத்தை வழங்குவர். விசா விண்ணப்பம் செய்வதற்கு முன்னர் செவிஸ் கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசிதை வைத்திருக்கவேண்டும். பின்னர் டிஎஸ்-160 விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விசா விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தவேண்டும். விசா நேர்காணல் தேர்வின்போது உங்கள் பயோ-மெட்ரிக் விவரங்களை அளிக்கவேண்டும்.
நேர்காணல்
விசா விண்ணப்பம் முடிந்த பின்னர் இந்திய மாணவர்கள் விசா பெறுவதற்கான இறுதிக் கட்டம்தான் அமெரிக்க விசா நேர்காணலில் கலந்துகொள்வது என்பதாகும்.
ஒரு சாதகமான நேர்காணலை முடித்தவுடன் உங்களுக்கு மாணவர் விசா கிடைக்கும். அமெரிக்க மாணவர் விசா நேர்காணல் என்பது பொதுவாக 4 முதல் 5 நிமிடங்களுக்கு நீடிக்கும். உங்கள் அமெரிக்க படிப்பு விசா நேர்காணல் ஆவணங்கள் அனைத்தையும், கோப்பில் நேர்த்தியாக வகைப்படுத்தி, உங்கள் நேர்காணலுக்குக் கொண்டு வர வேண்டும்.
மாணவர் விசா பெற என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
உங்கள் படிப்புக் காலம் முடிவடைந்து அதற்குப் பிறகு 6 மாத கால அவகாசம் இருக்கும்வகையிலான பாஸ்போர்ட்.
கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்ற I-20 விண்ணப்பம், டிஎஸ்-160 விண்ணப்பம், 2 புகைப்படங்கள்.
முந்தையப் படிப்பு தொடர்பான ஆவணங்கள், சான்றிதழ்கள்.
படிப்பு முடிந்ததும் அமெரிக்காவிலிருந்து புறப்பட வேண்டியிருக்கும்.
பெற்றோரின் வங்கி ஆவணங்கள், ஸ்டேட்மெண்ட்கள்.
ஐஇஎல்டிஎஸ் சான்றிதழை காண்பிப்பதன் மூலம், ஆங்கிலப் புலமையை நிரூபிக்க முடியும்.
இவற்றைச் செய்தாலே அமெரிக்கா விசாவை எளிதில் பெற்று அமெரிக்காவில் உயர்கல்வியை மாணவ, மாணவிகள் பெற முடியும்.


Click it and Unblock the Notifications












