மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளில் சேர உதவும் நீட் தேர்வில் எளிதில் மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்பது மாணவ, மாணவிகள் அனைவருக்கும் எழும் கேள்வியாகும். எளிதில் மதிப்பெண் பெறும் முறைகளை கல்வியாளர்களும், நிபுணர்களும் இங்கு விளக்கியுள்ளனர்.
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ, பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்கும் நீட் தேர்வு அடுத்த ஆண்டு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த தேர்வுக்கான முடிவுகள் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ தேர்வுகள் இரண்டு அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு ஜனவரி 24 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள்ளும், ஜேஇஇ தேர்வின் இரண்டாம் அமர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள்ளும் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நீட் தேர்வில் எளிதில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை கீழே காணலாம்.

இந்த நீட் தேர்வானது 3 மணி நேர கால அளவைக்கொண்டதாகும்.
இந்தத் தேர்வில், இயற்பியலில் 45 வினாக்கள், வேதியியலில் 45 வினாக்கள், உயிரியலில் (தாவரவியல், விலங்கியல்) 90 வினாக்கள் என மொத்தம் 180 வினாக்கள் இடம்பெறும். சரியான விடையைத் தேர்வு செய்யும் கொள்குறி வழியிலான இந்தத் தேர்வில், மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும்.
ஒரு சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட மொழிகளில் வினாத்தாள் இருக்கும்.
நீட் தேர்வு (NEET Exam) என்பது தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வைக் குறிப்பதாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவப் பள்ளிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களால் நடத்தப்படும் ஒற்றை நிலை தேசியத் தேர்வாகும். மாநில அளவில் நடத்தப்படும் பல நுழைவுத் தேர்வுகளின் முறைக்குப் பதிலாக, 2020 ஆம் ஆண்டு முதல் AIIMS & JIPMER நிறுவனங்களில் சேருவதற்குத் தேவையான ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வாக இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
11-ஆம் வகுப்பு முதலே தயாராக வேண்டும்
இந்த நீட் தேர்வுக்கு 11-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தயாராவது அவசியம்.
தேர்வின் போட்டித்தன்மை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஒருவர் வெற்றி பெறவும், மருத்துவ சீட்டை நிரப்ப தகுதியுடையவராகவும் இருக்க வேண்டுமென்றால், மிகச்சிறந்த திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது நன்கு படித்து போதிய மதிப்பெண்ணைப் பெறுவதற்குத் தயாராகி இருக்கவேண்டும்.
போதிய மதிப்பெண் பெற ஒரு ஆய்வுத் திட்டம், முழுமையா திரும்பப் படித்தல் (ரிவைஸ்), 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான என்சிஇஆர்டி(NCERT) பாடத்திட்டத்தின் தேர்ச்சி, முந்தைய தேர்வு வினாக்களுடன் தெரிந்திருத்தல் ஆகியவற்றை பின்பற்றவேண்டும்.
நீட் பாடத்திட்டத்தைப் புரிந்து கொள்ளுதல்
நீட் தேர்வுக்கு அத்தியாவசியமான பாடங்கள், நீட் தேர்வுக்கான புத்தகங்கள், வினா-விடை குறிப்புகள், பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை நன்கு படித்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்தப் பாடத்திட்டங்களை நன்கு புரிந்துகொண்டு தேர்வுக்குத் தயாராக வேண்டும்.
உங்கள் அடிப்படை வினாக்களை தெளிவுபடுத்திக் கொள்ள, என்சிஇஆர்டி (NCERT) பாடப்புத்தகத்தைப் படித்து, உண்மைகள், மொழி, நடைமுறைகள் மற்றும் பிற அறிவியல் ஆய்வுகளைப் புரிந்து கொள்ளலாம். ஆசிரியர்கள் கூறும் இயற்பியல், வேதியியல், உயிரியல் புத்தகங்களை வாங்கி முழுமையாக படித்தல் அவசியம்.
புத்தகங்கள்...
நீட் தேர்வு குறித்த அச்சத்தையும் பதற்றத்தையும் மாணவ, மாணவிகள் முதலில் தவிர்க்க வேண்டும். குழப்பம், கவனச் சிதறல்களின்றி இதுவரை படித்த அனைத்தையும் மீள்பார்வை செய்துகொண்டு தெளிவான மனநிலையில் இருங்கள். நல்ல புத்தகங்களை தேர்வு செய்து நீட் தேர்வை எதிர்கொள்ளலாம்.
முழுமையான வாசிப்பு
பள்ளிகளில் நடைபெறும் தேர்வு என்பது பாடங்களை முழுமையாகப் படித்திருக்கிறார்களா என்று சோதிக்கும் வகையில் அமையும். நுழைவுத் தேர்வு என்பது பாடத்திட்டத்தை முழுவதும் அறிந்து, புரிந்து வைத்திருக்கிறார்களா என்று சோதிக்கும் வகையில் இருக்கும். பாடங்களின் கோட்பாடுகள், காரண காரியங்கள் (Reasoning ) பாடம் சார்ந்த ஆழமான அறிவு, பாடம் தொடர்பான பிரதியீடுகள் இவையெல்லாம் மாணவர்களுக்குத் தெரிகிறதா என்று எடை போடுவதுபோல அமைந்திருக்கும். அதற்கேற்ப மாணவர்கள் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

இயற்பியல் விடைகள்
இயற்பியல் சம்பந்தமாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி விடையளிப்பது என்று இங்கு பார்க்கலாம். நீட் பாடத்திட்டத்தில் உள்ள பிளஸ்1, பிளஸ் 2 பாடங்களை எடுத்து, அதில் உள்ள வரையறைகள், சூத்திரங்கள், கோட்பாடுகள், கணக்குகள் இவற்றை முழுவதும் குழப்பமில்லாமல் திருப்பிப் பார்க்க வேண்டும். அடிக்கடி எழுதியும் பார்க்கலாம். இயற்பியலைப் பொறுத்தவரை, கோட்பாடுகளும், அவை சார்ந்த கணக்குகளும், திறனறி வினாக்களும், ரீசனிங் (Reasoning) வினாக்களும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்துப் பாடங்களையும் படிக்க வேண்டும் என்பது முக்கியம்.
அதேநேரத்தில் இயக்கம், இயக்க விதிகள், (Laws of Motion), வேலை, திறன், ஆற்றல் புவியீர்ப்பு நிலை, மின்னாற்றல், மின்காந்தத் தூண்டல் மாறும் மின்னூட்ட ஒளியியல் (Ray and Wave optics) கதிர்வீச்சு, பொருள் இருதன்மை போன்ற தலைப்புகளில் அதிக கவனம் செலுத்துவதுடன் இவற்றில் வரும் கணக்குகளை நன்றாகப் பயிற்சி செய்து பார்க்க வேண்டும் என்பதும் முக்கியமாகும்.
வேதியியல் பாடங்கள்
வேதியியலைப் பொறுத்தவரை, சமன்பாடுகள், வேதிப்பொருள்களின் பயன்பாடுகள், கூட்டுப்பொருள்களின் தன்மைகள், வடிவ சூத்திரங்கள், ஒரு பொருளிலிருந்து மற்ற வேதிப்பொருளைப் பெறுதலுக்கான சமன்பாடுகள், பெயர் வினைகள், கணக்குகள், அன்றாட வேதியியல் பயன்பாடுகள், வேதிப் பொருள்கள் தயாரிப்பு போன்ற பாடங்களை நன்றாக படித்து வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் இந்தப் பாடங்களை அடிக்கடி ரிவைஸ் செய்து பார்க்க வேண்டும்.
வேதியியல் பாடத்தைப் பொறுத்தவரை, நிறைய குறிப்புகளை நினைவில் நிறுத்த வேண்டிய தேவை இருப்பதால் மீண்டும் மீண்டும் கவனத்துடன் பாடங்கள் அனைத்தையும் முழுமையாகப் படிப்பது நல்லது. இதன்மூலம் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.
அணு அமைப்பு, தனிமை அட்டவணை, வெப்ப இயக்கவியல், ரெடாக்ஸ் விசைகள், சுற்றுப்புற வேதியியல், மின் வேதியியல், வேதி இயக்கவியல், சகபிணைப்பு கூட்டுப்பொருள், கரிம வேதியியல், உயிர் மூலக்கூறுகள் போன்ற பாடங்களிலும் மிகவும் கவனம் தேவை.

செய்முறை பாடங்கள்
மேலும், இயற்பியல், வேதியியலில் செய்முறை தொடர்பான பாடங்களையும் படித்து வைத்துக்கொள்வது நல்லது உயிரியல் பாடங்கள் உயிரியல், மிக எளிதாக மதிப்பெண் பெற வாய்ப்புள்ள பகுதியாக அமைந்துள்ளது. பாடங்களை முழுமையாக உள்வாங்கி நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பான பாடங்களில் அதிக கவனம் வேண்டும். மனித உடலியல் சம்பந்தமாக முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இந்தப் பாடங்களை முழுமையாக கற்றுத் தேர்ந்தாலே நாம் எளிதில் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
நீட் தேர்வில் தவிர்க்க வேண்டியவை
பாடங்களை நன்கு படிக்கும் அதே வேளையில் நீட் தேர்வின்போது சில தவிர்க்க வேண்டிய விஷயங்களை இங்கே கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
படிப்பில் கவனச்சிதறல்கள் அல்லது தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தேர்வுக்குத் தயாராகும் போது, நீட் (NEET) தேர்வர்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை இங்கே தந்துள்ளோம்.
தள்ளிப்போடுதல் கூடாது
நீட் தேர்வுக்குத் தயாராவதை ஒருபோதும் நீங்கள் தள்ளிப்போடக்கூடாது, ஏனென்றால் அது ஒரு சோம்பேறிப் பழக்கமாக அமைந்துவிடும். உங்கள் பணிகளையும் வீட்டுப்பாடங்களையும் சரியான நேரத்தில் முடிக்கும் பழக்கம் உங்கள் இலக்கை அடைய உதவும். நம்பிக்கையாக இருங்கள். உங்கள் படிப்பு திட்டம் மற்றும் படிப்பதற்கான கால அட்டவணையை மிகச்சிறப்பான முறையில் கடைப்பிடிக்கவும். மேலும் முந்தையத் தேர்வு வினாத்தாள்களை பார்த்து பயிற்சி பெறுதல் மிகவும் உதவியாக இருக்கும் என்று கல்வி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வேறு எதையும் யோசித்தல் கூடாது
நீட் தேர்வுக்குத் தயாராகும் அன்பர்கள் படிப்பதை மட்டுமே செய்யவேண்டும். படித்து நன்கு ஓய்வெடுத்து தேர்வுக்குத் தயாராகவேண்டும். இதைத் தவிர வேறு எதையும் பற்றி யோசிப்பது கூடாது. மேலும் உங்களுக்குத் தேவையான விஷயங்களைத் தவிர மற்ற எதிலும் நீங்கள் தலையிடக்கூடாது. வகுப்பில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். உங்கள் தேர்வுக்கான விஷயங்கலை நீங்கள் தேடும் போது, வேறு எதுவும் செய்ய வேண்டாம்.
டிவி மற்றும் சமூக ஊடகங்கள் தவிர்த்தல்
உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்கும் எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீட் (NEET) தேர்வு தயாரிப்புக்கு உங்கள் முழு கவனமும் அர்ப்பணிப்பும் தேவை. எனவே, டி.வி., செல்போன், சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
தரமான பாடங்கள்அதிகமாக படிப்பதை தரமான, பொருத்தமான பாடங்களைப் படிப்பது நல்லது. நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நீங்கள் படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையால் உயராது. நீட் பாடத்திட்டத்தை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும் மற்றும் தேர்வுக்கு மிகவும் கடினமான கேள்விகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
நீண்ட நேரம் படித்தல் நீண்ட நேரம் படிப்பது உங்களை சோர்வடையச் செய்தால், சிறிது நேரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுங்கள். 45 முதல் 60 நிமிட ஓய்வுக்குப் பிறகு, மீண்டும் படிக்கலாம். இதனால் உங்களது கற்கும் திறன் மேம்படும்.
எதிர்மறை நபர்கள் மற்றும் யோசனைகள் உங்களை ஊக்குவிக்கும் உற்சாகமான நபர்களின் குழுவுடன் நீங்கள் இருக்கலாம். உங்களுக்கு நெருக்கமானவர்கள், உங்கள் நண்பர்கள், சகாக்கள், பெற்றோர்கள் அல்லது பயிற்றுவிப்பாளர்களின் உதவி உங்களுக்கு நன்மை பயக்கும்
மேலும், என்சிஇஆர்டி புத்தகங்களைப் படிப்பது சிறந்த நீட் தேர்வுக்கான தயாரிப்பை உருவாக்கும். உங்கள் கால அட்டவணையை வைத்து, விடாமுயற்சியுடன் படிக்கவும். தேர்வு முறைகள் மற்றும் பாடத்திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். நீங்கள் தயார் செய்யும் போது, நீங்கள் படித்ததை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் எதிர்மறை மதிப்பெண்கள் உங்கள் தேர்வு மதிப்பெண்களை குறைக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கல்வி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications












