நிர்வாகப் பணிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த பணியிடம் என்றால் அது மேலாளர் பணியாக இருக்கலாம். தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூட தனது குறளில் மேலாண்மை குறித்து ஒரு குறளை எழுதியுள்ளார். திருக்குறளில் தெரிந்துவினையாடல் என்ற அதிகாரத்தில் மேலாண்மை பற்றி திருவள்ளுவர் மிகவும் அழகாக குறிப்பிட்டுள்ளார்.

மேலாண்மை குறித்து விளக்கும் அந்த குறள்:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
என்பதே அந்தக் குறளாகும்.
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அந்தத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே இந்த குறளின் பொருள் என்று தமிழறிஞர் மு. வரதராசனார் குறிப்பிடுகிறார்.
இந்தப் பணியை இவரிடம் கொடுத்தால் அதை செவ்வனே செய்து முடிப்பார் என்று ஒரு மேலாளர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்து செவ்வனே தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அது அவருக்கும், அவர் சார்ந்த நிறுவனத்துக்கும் பெருமை சேர்க்கும்.
மேலாளராக பணிபுரியும் நபர் 5 முக்கிய பணிகளை திறம்பட செய்து முடித்தால் அவர் அந்தப் பணிக்குரிய சிறப்பைச் செய்தவராக மாறுவார். கணித்தல், திட்டமிடல், ஆணையிடுதல், ஒழுங்கமைத்தல், முடிவு செய்தல் என்பதே அந்த 5 முக்கிய பணிகளாகும்.

கணித்தல்: இந்தப் பணியை எப்படிச் செய்வது என்பதை முன்கூட்டியே கணிக்கவேண்டும்.
திட்டமிடல்: எந்த செயலைச் செய்தாலும் செய்யத் தொடங்குவதற்கு முன்பாகவே அதனை எப்படிச் செய்வது, அதற்கான வளங்களை எங்கிருந்து பெறுவது, திட்டமிட்ட பணிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பன பற்றியெல்லாம் முன்பே திட்டமிடுதல் மேலாளர் பணிக்கு அவசியமாகும்.
ஒழுங்கமைத்தல்: திட்டமிட்டுள்ள பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் திரட்டத் தயாராக வேண்டும்.
ஆணையிடுதல்: திட்டப் பணியை தகுந்த நபரிடம் கொடுத்து ஆணையிட தயாராக வேண்டும்.
முடிவு செய்தல் : எந்த எந்தப் பணிகளை யார் யாரிடம் ஒப்படைக்கலாம் என்பது குறித்து முடிவு செய்தல் ஆகிய 5 பணிகளும் மேலாளர் பணியை எளிதாக்கும்.
இதுபோன்ற மேலாளராக பணிபுரிய மேலாண்மை படிப்பு அவசியம். மேலாண்மை படிப்பை படிப்பவர்கள்தான் பின்னாளில் தங்களது துறையில் அதிக அளவில் பரிமளிக்க முடியும். நிர்வாகப் பணியிடங்களுக்கான படிப்புகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம். எம்பிஏ உள்ளிட்ட பல்வேறு நிர்வாகவியல் படிப்புகளை படிப்பவர்கள் மேலாளர், தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சேர்ந்து தங்களை உயர்த்திக் கொள்ள முடியும்.
முன்பு எம்பிஏ என்றால் வணிக நிர்வாகம் சம்பந்தமான பொதுவான படிப்பாக மக்களால் கருதப்பட்டு வந்தது.
அந்த எம்பிஏ படிப்புகளில் சேர்ந்து படிப்பது என்பது குதிரைக் கொம்பாக பார்க்கப்பட்ட காலமும் இருந்தது. மேலும் இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு அதிக கட்டணம் செலுத்தவேண்டும் என்ற நிலையும் இருந்தது. ஆனால் நிர்வாகவியல் படிப்புகள் தற்போது மிகவும் எளிதானதாக மாறிவிட்டன. தற்போதைய காலச் சூழ்நிலையில் வேறு எந்த படிப்பு படித்தாலும், அதனுடன் சேர்த்து வணிக நிர்வாக படிப்பான எம்பிஏவும் படிப்பதை மாணவர்கள் தங்களது வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஏனெனில் நிர்வாக படிப்பு அனைத்து நிலைகளிலும் அவசியமானதாகக் கருதப்படுகிறது என்பது முக்கியம்.
அலுவலக மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களில் சேர வேண்டும் என்றால் வணிக நிர்வாகவியல் படிப்புகளின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

பொதுவான எம்பிஏ மற்றும் நிர்வாகவியல் படிப்பது என்ற நிலை தற்போது மாறிவிட்டது. சிறப்பு எம்பிஏ, சிறப்பு நிர்வாகவியல் படிப்புகளை மாணவ, மாணவிகள் படிக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
அனைத்து துறைகளிலும் நிர்வாகம் செய்வது குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள அந்த துறை சார்ந்த எம்பிஏ, நிர்வாகவியல் படிப்புகளைப் படிப்பதற்கான சூழ்நிலை நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த துறைகளைத் தேர்வு செய்து அது சம்பந்தமான எம்பிஏ படிப்புகளை மாணவர்கள் படித்தால் வேலை கிடைப்பது எளிதாகிவிடும்.
வணிக நிர்வாகியாக மாற விரும்பும் ஒவ்வொரு அலுவலக நிபுணருக்கும் பரிந்துரைக்கும் அலுவலக நிர்வாகப் படிப்புகள் குறித்து இங்கே தரப்பட்டுள்ளது.
1. அலுவலக மேலாண்மை மற்றும் நிர்வாகம்
அலுவலக மேலாண்மை மற்றும் நிர்வாகப் படிப்புகள் பயில்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
அலுவலகம் மற்றும் நிர்வாகம், அலுவலகச் சூழல், அலுவலக செயல்பாடுகள், பொறுப்புகள், மனித வள மேலாண்மை, பணியாளர்கள் மேலாண்மை, அலுவலக உபகரணங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப தலைப்புகள், படிவங்கள் மற்றும் வணிக ஆவணங்கள், வணிக கடிதங்கள், குறிப்புகள் மற்றும் கூட்டங்கள், வார்த்தை செயலாக்கம் மற்றும் கட்டுரையை திருத்துதல், அலுவலக வரவேற்பு, எழுதுபொருள் மற்றும் நிதி விஷயங்கள் குறித்த பாடங்களை இதன்மூலம் படிக்க முடியும்.
இதுபோன்ற படிப்புகளை நாட்டிலுள்ள பல்வேறு இன்ஸ்டிடியூட்டுகள் அளிக்கின்றன. 12 மாதங்களில் இந்த படிப்புகளை முடிக்க முடியும். டிப்ளமோ படிப்பாக பல்வேறு இன்ஸ்டிடியூட்டுகள் இதை வழங்குகின்றன.
2. அலுவலக மேலாளர் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு
அலுவலக நிர்வாகியாக நீங்கள் வெற்றிபெறத் தேவையான பொதுவான திறன்களை இந்தப் படிப்புகள் கற்பிக்கும். நேர மேலாண்மை, வணிகத் தொடர்பு, Microsoft Office மென்பொருள் (மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்செல், அவுட்லுக் மற்றும் பவர்பாயிண்ட் உட்பட), மனிதவளத் தேவைகள், உடல்நலம் மற்றும் பாதுகாப்புத் தேவைகள், திட்ட மேலாண்மை, வணிகக் கணக்குகள், தலைமைத்துவ திறன்கள் மற்றும் சமூக ஊடக உத்திகள் பற்றி இந்தப் பாடத்திட்டத்தில் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். டிப்ளமோ படிப்பாக இதை நீங்கள் படிக்க முடியும்.
3. அலுவலக நிர்வாகப் படிப்பு (அமெரிக்க தரத்தில் படிப்பு)
அலுவலக நிர்வாகத் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப திறன்கள் மற்றும் தொடர்பு போன்ற மென்மையான திறன்கள் இரண்டையும் கற்பிக்க இந்த வகை படிப்புகள் அமெரிக்கத் தரத்தில் கற்றுத் தரப்படுகின்றன. அலுவலக நிர்வாகம் மற்றும் வரவேற்பு திறன்கள், கணினி பயன்பாடுகள் (மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் உட்பட), புத்தக பராமரிப்பு மற்றும் ஊதியம், நேர மேலாண்மை, மனித வளங்கள் மற்றும் தலைமைத்துவ திறன்கள் ஆகியவை இந்தப் படிப்பில் அடங்கும்.
16 மணி நேர பயிற்சிக்குப் பின்னர் சான்றிதழ் தரப்படும். பின்னர் 12 மாத படிப்புக்கான அணுகலை நீங்கள் பெற முடியும். மேலும், எந்த நேரத்திலும் உங்கள் பாடத்திட்டத்தை முடிக்க முடியும்.

4. நிர்வாகம் மற்றும் செயலர் படிப்பு
நுழைவு நிலையில் அலுவலக வல்லுநர்களுக்கு, இந்த பாடத்திட்டமானது அலுவலக அமைப்பில் நீங்கள் வெற்றிபெறத் தேவையான திறன்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும். கீபோர்ட் மற்றும் அலுவலக மேலாண்மை மென்பொருளுடன் பணிபுரிவது உட்பட கணினி திறன்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
மேலும் நிர்வாக மற்றும் அலுவலக உதவியாளர், செயலர் பணிகளுக்குத் தேவையான பல்வேறு தொழில்நுட்ப திறன்களைப் பெற முடியும். இந்த சான்றிதழ் பாடத் திட்டத்தை முடிக்க 80 மணிநேரம் பயிற்சி தேவைப்படும். அதன் பின்னர், 12 மாதப் பயிற்சித் திட்டத்துக்கான அணுகலைப் பெற முடியும். அதற்குள் நீங்கள் பயிற்சியை முடித்தால், சிபிடி(CPD-தொடர் தொழில்திறன் மேம்பாடு) சான்றளிக்கப்பட்ட சான்றிதழ் கிடைக்கப்பெறும்.
5. அலுவலக மேலாளர் பயிற்சிப் படிப்பு
அலுவலக மேலாளர் பயிற்சிப் படிப்புகளை பல்வேறு இன்ஸ்டிடியூட்டுகள் வழங்குகின்றன. அலுவலக மேலாளர் பயிற்சிப் படிப்பானது, நீங்கள் வெற்றிகரமான மேலாளராக இருப்பதற்குத் தேவையான அனைத்து திறன்களையும் உங்களுக்கு வழங்கும் என்பதில் எந்த ஐயமும் கொள்ள வேண்டாம். அலுவலக மேலாளர்களின் பங்கு மற்றும் பொறுப்புகள் மற்றும் அலுவலக நிர்வாகத்தின் அடிப்படைக் கொள்கைகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த பாடத் திட்டம் குறிப்பாக சுகாதார துறையில் உள்ள மாணவர்களுக்கு அல்லது மருத்துவ அலுவலகத்தை நிர்வகிக்க விரும்பும் எவருக்கும் உதவியாக இருக்கும் என்பது உறுதி.
6.மெய்நிகர் குழுக்களை பணியமர்த்துவது மற்றும் நிர்வகிப்பது தொடர்பான படிப்பு
வணிக அலுவலகங்கள் மெய்நிகர் சூழல்களுக்கு (விர்ச்சுவல் ரியாலிட்டி) நகரும் போது, அலுவலக மேலாளர்களின் பங்கு வேகமாக மாறும் என்பது உண்மை. இந்த பாடத் திட்டமானது உங்கள் மெய்நிகர் குழுவின் வெற்றியை எளிதாக்க உதவும். ஒரு மெய்நிகர் அலுவலக மேலாளர் எவ்வாறு வலுவான தொடர்பு மற்றும் தலைமைப் பழக்கங்களை உருவாக்குகிறார், பயனுள்ள மெய்நிகர் அலுவலக நடைமுறைகளை உருவாக்குகிறார், சிறந்த ஆன்லைன் கருவிகளை எப்படி தேர்ந்தெடுக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
7. இமோஷனல் இன்டலிஜன்ஸ் பயிற்சி
இமோஷனல் இன்டலிஜன்ஸ் எனப்படும் உணர்வுதொடர்பான நுண்ணறிவுப் படிப்புகள்,உங்கள் சக பணியாளர்களுடன் எப்படி பேசுவது, பழகுவது, வேலை வாங்குவது என்பதை செயல் விளக்கங்கள் மூலம் உங்களால் அறிந்துகொள்ள முடியும். வெவ்வேறு வகையான நபர்களைப் பற்றியும், ஒவ்வொரு வகையை எவ்வாறு அணுகுவது என்பது பற்றியும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். இது உங்கள் குழு உறுப்பினர்களை மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் வைத்திருக்கவும் உதவும். இந்த பயிற்சியை முடிக்க 90 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.
8. நிறுவன நடத்தைகள்
இந்த பயிற்சியானது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் பல்வேறு வகையான மக்கள் விஷயங்களை வெவ்வேறு வழிகளில் எப்படிப் பார்ப்பது என்பதையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.
இந்த வெவ்வேறு கண்ணோட்டங்களை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் போது உங்கள் வணிகத்தை நீங்கள் வலிமையாக்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில், ஊழியர்களுடன் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது, திறந்த, தகவல்தொடர்பு நிறுவன கலாச்சாரத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.
9. வணிகத் தொடர்பை மேம்படுத்த எழுத்துப் பயிற்சி
நமது வணிகத் தொடர்பை மேம்படுத்த எழுத்துப் பயிற்சி அவசியம். அதுபோல அலுவலக மேலாளர்களுக்கு வணிகத் தொடர்பை மேம்படுத்த எழுத்துப் பயிற்சி எப்போதும் உதவியாக இருக்கும். அலுவலகம் சார்ந்த மெமோ கடிதங்கள், அறிக்கைகள், சுற்றறிக்கைகள் வழங்க வேண்டும். மேலும் அலுவலகத்திலிருந்து வெளியே செல்லும் தகவல்தொடர்புகளை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். தொழில்முறை வணிகக் கடிதம், பதில் அல்லது பிற வணிகங்களுக்கான அழைப்பை எவ்வாறு எழுதுவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.
சிறந்த வணிக எழுத்தின் 10 கொள்கைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் உங்களது உரை தயாரிப்புகளை மேம்படுத்தவும், உங்கள் யோசனைகளை நம்பிக்கையுடனும் தெளிவாகவும் வழங்கவும் இந்த பயிற்சி மூலம் பெறலாம்.
10.தொடர்பு உத்திகள்
உங்கள் தகவல்தொடர்புகளின் செயல்திறனை அதிகரிக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் இந்தப் பயிற்சியானது பயன்படும். பல்வேறு ஆன்லைன் தகவல்தொடர்பு பயன்பாடுகளை எப்படி, எப்போது பயன்படுத்துவது என்பதை இந்தப் பாடத்திட்டம் உங்களுக்குக் கற்பிக்கும்.
தகவல்தொடர்பு மூலம் மற்றவர்களை எவ்வாறு சிறப்பாக கையாள்வது மற்றும் அவர்களிடம் செல்வாக்கை செலுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்லலாம்.
இதன் மூலம் நீங்கள் அதிக பயனுள்ள கூட்டங்களை நடத்த முடியும். மேலும் கடினமான உரையாடல்களை நேர்மறையான முறையில் நடத்தவும் முடியும்.
இதுபோன்ற பயிற்சிகள் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் இன்ஸ்டிடியூட்டுகளில் வழங்கப்படுகின்றன. மேலும் இந்தப் பயிற்சிகளை வெளிநாடுகளில் உள்ள பிரபல தனியார் இன்ஸ்டிடியூட்டுகள், பல்கலைக்கழகங்களிலும் பயிலலாம். இந்தப் படிப்புகளை பயில்பவர்கள் நிறுவனங்களில் மேலாளர் உள்ளிட்ட நிர்வாகப் பணியிடங்களில் நன்கு பரிமளிக்க முடியும்.


Click it and Unblock the Notifications












