கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக அமெரிக்கா மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, பள்ளிகளைத் திறக்காவிட்டால் மாகாணங்களுக்கான நிதி ரத்து செய்யப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், கொரோனா கிருமியின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இதனிடையே, கொரோனா நோய்த் தொற்றில் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா உள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது சர்ச்சைக்குரிய வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவற்றை உடனடியாக திறக்க வேண்டும் என மாகாண அரசுகளுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவில் பள்ளிகள் திறக்கப்படுவது அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் குழந்தைகளின் கல்விக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இதையும் மீறி பள்ளிகளைத் திறக்காவிட்டால், மாகாணங்களுக்கான நிதி துண்டிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.