பிரபல கியூ.எஸ். உலக பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் 22 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. இதில், கடந்த ஆண்டைப் போலவே முதல் 200 இடங்களில் மூன்று இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
இதில், சென்னை ஐஐடி கடந்த முறை 264-ஆவது இடத்திலிருந்து இந்த ஆண்டு 271-ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

கியூ.எஸ். தரவரிசைப் பட்டியல்:
உலக அளவில் உயர்கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதில் கியூ.எஸ். தரவரிசைப் பட்டியல் மிகவும் கவனிக்கத்தக்கது. இந்த அமைப்பு கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சித் திட்டங்கள், ஆராய்ச்சி ஊக்குவிப்பு, புதிய கண்டுபிடிப்புகள், கட்டுரை வெளியீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிடும்.

2020-ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியல்:
அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான கியூ.எஸ். தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு 162-ஆம் இடத்திலிருந்த மும்பை ஐஐடி, இந்த முறை பத்து இடங்கள் முன்னேறி 152-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

பின்னடைவில் தில்லி ஐஐடி:
மேலும், தில்லி ஐஐடி 182-ஆவது இடத்தில் இந்திய கல்வி நிறுவனங்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இருப்பினும், கடந்த முறை 172-ஆவது இடத்தில் இருந்த தில்லி ஐஐடி இந்த ஆண்டு பத்து இடங்கள் பின்தங்கியுள்ளது. அதேப் போன்று கடந்த முறை இரண்டாம் இடத்திலிருந்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் இந்த ஆண்டு 184-ஆவது இடத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை ஐஐடி:
தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ஐஐடி கடந்த முறை 264-ஆவது இடத்திலிருந்து இந்த ஆண்டு 271-ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்:
அண்ணா பல்கலைக் கழகம், கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறை 701 முதல் 800 இடங்களுக்கு இடைப்பட்ட இடத்தினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

800 முதல் 1000:
வேலூர் விஐடி, மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் 801 முதல் ஆயிரத்துக்கு இடைப்பட்ட இடத்தினைப் பெற்றுள்ளது.