பள்ளித் தேர்வு ஒன்றில் மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என கேட்கப்பட்ட கேள்வியால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அதுவும் அவர் பிறந்த மாநிலத்தில் செயல்பட்டு வரும் பள்ளியிலேயே இதுபோன்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தேசப்பிதா, மகாத்மா என அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியா சுதந்திரம் பெற்ற அடுத்த வருடமே, 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியன்று கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் இன்றும் உலகம் அறிந்த ஓர் வரலாற்று சோக நிகழ்வாகும்.

150-வது காந்தி ஜெயந்தி
வன்முறைக்கும், அடக்குமுறைக்கும் எதிராக அகிம்சை முறையிலேயே போராடி நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த மகாத்மா காந்தி-யின் 150ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கடந்த 2ஆம் தேதி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

காந்தி ஏன் தற்கொலை செய்தார்?
இதனிடையே, குஜராத் மாநிலத்தில் அரசு உதவி பெறும் சுஃபலாம் ஷால விகாஸ் சங்குல் என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உள் மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது. இதில், "காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?" என்ற பிற்போக்குத் தனமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதனை கண்ட மாணவர்கள் செய்வதறியாது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மது விற்பனை அதிகரிப்பு
அதுமட்டுமின்றி, 12ஆம் வகுப்பு மாணவர்களின் கேள்வித்தாளில் இருந்த மற்றொரு கேள்வியும் மாணவர்களை மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. அதில், "உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்து வருவதையும், சட்டவிரோத மது உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட தொல்லைகளையும் பற்றி புகார் அளித்து மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு கடிதம் எழுதுதல்" என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் வழங்கப்பட்ட இது போன்ற கேள்விகளால் மாணவர்கள் மட்டுமின்றி கல்வி அதிகாரிகளுமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை
இதுகுறித்து காந்தி நகரின் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் வாதர் கூறுகையில், "சனிக்கிழமையன்று சுயநிதி பள்ளிகளில் நடைபெற்ற உள் மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த கேள்விகள் மிகவும் மோசமானதாகும். இந்தக் கேள்விகள் ஆட்சேபனைக்கு உட்பட்டவை. கேள்வித்தாள் அமைக்கப்பட்டது குறித்து நாங்கள் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளோம். விசாரணை அறிக்கை கிடைத்ததும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எந்தத் தொடர்பும் இல்லை
இந்தக் கேள்வித் தாள்கள் சுஃபலாம் ஷால விகாஸ் சங்குல் பள்ளிகள் நிர்வாகத்தினால் கேட்கப்பட்டவை. இதற்கும் மாநில கல்வித் துறைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என காந்திநகர் மாவட்ட கல்வி அதிகாரி பரத் வதேர் தெரிவித்துள்ளார்.

கண்டனங்களுக்கு உட்பட்டது
காந்தி போன்ற பல தியாகிகளால் கட்டமைக்கப்பட்டதுதான் இந்தியா. இந்தியாவின் தேசப் பிதா, மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலேயே செயல்பட்டு வரும் பள்ளியில் அவரது இறப்பு குறித்தான பொய்யான தகவலை பரப்பும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி வன்மையான கண்டனங்களுக்கு உட்பட்டது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.