கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தற்போது அண்ணா பல்கலைக் கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அப்பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொரோனா வைரசின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடந்த மாதம் முதலே பள்ளி, கல்லூரிகளுக்கான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அண்ணா பல்கலைக் கழக பருவத் தேர்வுகள் குறித்த எவ்வித அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய 525 தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பருவத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 16-வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
மேலும், கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளைத் தவிர அனைத்து வகுப்புகளுக்கும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தற்போது தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாகவும், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதன் காரணத்தினாலும் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அண்ணா பல்கலைக் கழக தேர்வு அட்டவணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு பருவத் தேர்வுகள் தொடர்பான புதிய அட்டவணை வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.