ஆண்டுதோறும் ஏராளமான கல்வி நிபுணர்களை கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (கேஐஎஸ்எஸ்) உருவாக்கி வருகிறது என்று மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (கேஐஎஸ்எஸ்) பல்கலைக்கழகத்துக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் வந்திருந்தனர்.
அப்போது 2023-ம் ஆண்டுக்கான கேஐஎஸ்எஸ் மனிதநேய விருதை பில் கேட்ஸுக்கு கேஐஎஸ்எஸ் பல்கலைக்கழக வேந்தரும், நிறுவனருமான டாக்டர் அச்சுதா சமந்தா வழங்கிப் பாராட்டினார்.

அப்போது விழாவில் பில் கேட்ஸ் பேசியதாவது:
ஒடிசாவில் உள்ள கேஐஎஸ்எஸ் பல்கலைக்கழகத்தின் சாதனைகள் குறித்து நான் அதிகம் கேள்விப் பட்டுள்ளேன். பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வருகிறார் டாக்டர் அச்சுதா சமந்தா.
அவரின் பணிகள் பாராட்டத்தக்கவை. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் இவரின் சீரிய தொண்டால் பட்டம் பெற்று வெளியே செல்கின்றனர்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கல்வி நிபுணர்களை உருவாக்கும் கோயிலாக கேஐஎஸ்எஸ் பல்கலைக்கழகம் விளங்கி வருகிறது.
மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த விருதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறார் டாக்டர் அச்சுதா சமந்தா. கேஐஎஸ்எஸ் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் கதையாக அமைந்துள்ளது. இது பூர்வீக வேர்களில் இருந்து ஆயிரக்கணக்கான சிறுவர் மற்றும் சிறுமிகளின் வாழ்வை மேம்படுத்துகிறது. 80,000 இளைஞர்கள் தரமான கல்வியைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்று நினைப்பது நம்பமுடியாதது.
சிறந்த கல்வியைப் பெறுவது எப்போதும் உற்சாகமாக இருக்கிறது. இங்கு கல்வி பயிலும் மாணவர்கள், அந்த கல்வியின் பயனை சமூகத்திற்கு எவ்வாறு திருப்பித் தருவது என்று குறித்து சிந்திக்க வேண்டும்.
பழங்குடி சமூகங்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக டாக்டர் அச்சுதா சமந்தாவின் சீரிய பணியையும், அர்ப்பணிப்பையும் நான் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் டாக்டர் அச்சுதா சமந்தா பேசியதாவது: 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கேஐஎஸ்எஸ்(KISS) மனிதாபிமான விருதை பில் கேட்ஸுக்கு வழங்குவது, அவரது சிறப்பான பங்களிப்பை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், அங்கீகாரத்தின் கௌரவத்தையும் உயர்த்துகிறது. அவர் இந்த விருதை ஏற்றுக்கொண்டது உலகளவில் மனிதாபிமான பணிகளுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது. எங்கள் விருது பெற்றவர்களின் மதிப்பிற்குரிய பட்டியலில் கேட்ஸ் இணைவது எங்களுக்கு ஒரு ஆழ்ந்த கவுரவமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.


Click it and Unblock the Notifications












