மருத்துவப் படிப்பில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்விற்கு தமிழக மக்களிடையே தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில், தமிழக அரசின் நீட் பயிற்சி மையங்களில் படித்த 19,355 மாணவர்களில் யாருக்கும் மருத்துவப் படிப்புக்கான முதல்கட்டக் கலந்தாய்வில் இடம் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

கட்டாயமான நீட்
இந்தியாவில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதனால் இந்த ஆண்டு முதல் முறையாக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழக அரசே இலவசமாக நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்க முடிவு செய்தது.

திட்டம் மட்டும் போட்ட அமைச்சர்
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் பயிற்சி மையங்களைத் தொடக்கிவைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த பயிற்சித் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 500 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்றார்.

எதிர்ப்புக் குரல்கள்
நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமானது எனவும், மாறுபட்ட கல்விச் சூழலில் இதுபோன்ற ஒரேமாதிரியான தேர்வு சாத்தியமற்றது எனவும் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர். குறிப்பாக, இதன் மூலம் தனியார் நீட் கோச்சிங் சென்டர்கள் அதிகரிக்கும், அதில் அதிகப்படியான கட்டணம் செலுத்தி ஏழை, எளிய மாணவர்களால் படிக்க முடியாது என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

பள்ளிக் கல்வித் துறை
இச்சூழ்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஸ்பீட் மருத்துவ நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் 412 பயிற்சி மையங்களை அமைத்து மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சிகளை அளித்தது. இந்த பயிற்சியில் மொத்தம், 19,355 பேர் பங்கேற்றனர். அதில், 2,747 மாணவர்களுக்கு அவர்களுடைய வீட்டுக்கே சென்று பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்தும் வீன்
தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்ட இந்த பயிற்சியில் பயின்ற ஒரு மாணவருக்குக் கூட இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்கவில்லை. கலந்தாய்வின் அடுத்தடுத்த கட்டங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைப்பது கடினமாகவே இருக்கும் நிலை உருவாகி வருகிறது.

மதிப்பெண் முக்கியமில்லை
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் உமாசங்கர். இவர் 440 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 474 என்பதால் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

தேர்ச்சி அதிகம், ஆனால் இடமில்லை
கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1,333 பேர். 2019-ஆம் ஆண்டில் 2,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 10 மாணவர்கள் மட்டுமே 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 32 மாணவர்கள் அதனைப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் அரசுப் பள்ளியில் பயின்ற 3 மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த நான்கு மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது.

அவர் சொன்னது சரிதான்?
சமீபத்தில் நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்தும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு என்ற அடிப்படையில் ஏழை, எளிய மாணவர்கள், அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி பறிக்கப்படுகிறது என்றும் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அரசின் நீட் பயிற்சியில் பயின்ற 19,355 பேரில் யாருக்கும் சீட் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.