கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை மீண்டும் திறப்பது குறித்த அறிவிப்பை தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வரும் டிசம்பர் 7ம் தேதி முதல் கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு
நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து வகை சேவைகளும் முடக்கப்பட்டு நாடே ஸ்தம்பித்து போனது.

பள்ளி, கல்லூரி மூடல்
ஊரடங்கின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. விடுதிகளில் இருந்த மாணவர்களும் கூட அதிரடியாகச் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தேர்வுகள் ரத்து
மேலும், பள்ளி, கல்லூரி உள்ளிட்டவற்றில் தேர்வுகள் நடத்தப்பட முடியாத சூழலே இருந்து வந்த நிலையில் பெரும்பாலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வுகள் நடப்பட்டது.

பள்ளிகளை திறக்க முதலமைச்சர் முடிவு
இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளைத் திறப்பதின் மூலம் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொது மக்கள், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த முடிவை தமிழக அரசு திரும்பப் பெற்றது.

டிசம்பர் முதல் கல்லூரிகள் திறப்பு
இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகளைத் தொடங்க அனுமதியளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடுதிகளைத் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி திறப்பு
மேலும், மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகளை டிசம்பர் 7ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கு 2021 பிப்ரவரி 1ம் தேதி முதல் வகுப்புகள் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இ-பாஸ் கட்டாயம்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளில் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர இதர வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இ-பாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

முதலமைச்சர் வேண்டுகோள்
ஊரடங்கு தளர்வுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறை தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைப்பிடிப்பதைச் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளைக் குறிப்பிட்டுள்ளார்.