தமிழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு குறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கல்லூரி திறப்பு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளையும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு கல்லூரி திறக்கப்படும் பட்சத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம் காலை, மாலை என 2 வேளைகள் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்படுவர். முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு எம்பிபிஎஸ் அறிமுக வகுப்புகள் நடைபெற்றன. இவ்வாறு அவர் கூறினார்.