தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு தற்போது ஆன்லைன் வழியில் வகுப்புகளும், தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நெருங்கி வருகிறது. இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலும் விரைவில் நடைபெற உள்ளதால் பள்ளி பொதுத்தேர்வு தேதி அட்டவணை, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு பின் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் தேர்வுகள் நடத்த நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் வருகைப்பதிவு கட்டாயமில்லை எனவும், மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பள்ளிக்கு வரலாம் அல்லது ஆன்லைன் வழியிலேயே வகுப்புகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று முதல் அனைத்து பள்ளிகளும் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஆன்லைன் மூலமாக பயிலும் மாணவர்களின் பட்டியலும் இணைக்கப்பட உள்ளது.
மேலும், விரைவில் பொதுத் தேர்விற்கான அட்டவணை வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.