கொரோனா ஊரடங்கின் காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் மேமற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நீடித்த நிலையில் அவர்களுக்கு தசம மதிப்பில் மதிப்பெண்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 12ம் வகுப்பு மாணவர்களின் 10ஆம் வகுப்பு தேர்வு, 11ஆம் வகுப்பு தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு செயல்முறை தேர்வு ஆகியவை சேர்த்து மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதியன்று 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியானது. மாணவர்கள் கொடுத்த செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.
அரசு அளித்துள்ள மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் மறுதேர்வு எழுதலாம் என்றும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அதற்கான தேர்வு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியின் மூலம் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












