12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு வரும் ஜூலை 27ம்தேதி தேர்வு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக பாடத்திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இதனிடையே கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக மார்ச் 24ம் தேதியன்று நடைபெற்ற தேர்வில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. அவர்களுக்கு தனியே தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த கல்வியாண்டின் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. மார்ச் 24 ஆம் தேதி நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு இறுதித் தேர்வில் பல மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனது.
அவர்களுக்கு மீண்டும் தேர்வை நடத்த பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகளை விடுக்கப்பட்டன.
இந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர், விடுபட்ட அந்த தேர்வை வரும் ஜூலை 27 ஆம் தேதியன்று நடத்த அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, மாணவர்கள் வசதிக்காக அவர்கள் தங்களது சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இத்தேர்விற்கான நுழைவுச் சீட்டினை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவர் பள்ளிகளிலோ ஜூலை 17ம் தேதி வரையில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனி தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தனித்தேர்வு மையங்களிலேயே நுழைவுச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான நுழைவுச் சீட்டினை ஜூலை 17 (நாளைக்குள்) இணையதளம் அல்லது பள்ளி வாயிலாக பெற்றுக்கொள்ள வேண்டும்.