சென்னையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தப் படிப்பில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கும் www.tnmgrmu.ac.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தொடர்புகொள்ளலாம்.
தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் (The Tamil Nadu Dr. M.G.R. Medical University) தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது சென்னையின் பிரதானப் பகுதியான கிண்டியில் அமைந்துள்ளது. 1987-ம் ஆண்டில் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகமாகத் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை காமராசர், பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் மருத்துவப்பிரிவுகள் இதன் கீழ் இணைந்துள்ளன. 1990 அக்டோபர் முதலாம் தேதி இந்த மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டது.

இந்த புதிய படிப்பு தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப்படிப்பு தற்போது பயிற்றுவிக்கப்படுகிறது.
இது இரு வருடம் கொண்ட படிப்பாகும். இந்த புதிய படிப்பில் 8 மாணவ, மாணவிகள் சேரலாம். ஏதேனும் ஓர் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். மொத்தம் 3 தாள்களுக்கான தேர்வு முறையில், அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விவரங்கள், மருத்துவம் சார் சட்டங்கள், மருத்துவக் குற்றங்கள், மருந்தியல், ஊட்டச்சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் www.tnmgrmu.ac.in என்ற இணையதள முகவரியிலோ, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-22200713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தினந்தோறும் வகுப்புகள் கிடையாது. இணையவழி வகுப்புகள் வாரம் ஒரு முறையும், நேரடி வகுப்புகள் மாதம் ஒரு முறையும் நடத்தப்படும்.
முதுநிலை மருத்துவ இதழியல் படிப்புக்கான ஓராண்டு கல்வி கட்டணம் ரூ.7 ஆயிரமாக இருக்கும். தேர்வுக் கட்டணங்கள் இதில் அடங்காது. இந்த படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












